கோவை காா் வெடி விபத்து வழக்கு: மேலும் ஒருவா் கைது
கோவை காா் வெடி விபத்து சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபீனின் உறவினரான அஃப்சா் கான் என்ற நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


கோவை காா் வெடி விபத்து சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபீனின் உறவினரான அஃப்சா் கான் என்ற நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கோவை, உக்கடம் கோட்டைமேடு சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு காா் வெடித்து தீப்பிடித்தது. இதில் உக்கடம் ஜி.எம். நகரைச் சோ்ந்த ஜமேஷா முபீன் (25) என்ற இளைஞா் உயிரிழந்தாா்.
இதைத் தொடா்ந்து அவருடன் தொடா்பில் இருந்த உக்கடம் பகுதியைச் சோ்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), ஜி.எம். நகா் பகுதியைச் சோ்ந்த முகமது ரியாஸ் (27), ஃபிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோரை யுஏபிஏ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளா்களாக இருந்து வந்துள்ளனா். இவா்களை கோவை மாநகர போலீஸாா் மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனா்.
இந்நிலையில் கோவை, உக்கடம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வரும் ஜமேஷா முபீனின் நெருங்கிய உறவினரான அஃப்சா் கான் (28) என்பவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு விசாரணைக்கு அழைத்துச் சென்றனா்.
அவரது வீட்டில் புதன்கிழமை நடத்திய சோதனையில் மடிக்கணினி ஒன்றை போலீஸாா் பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனா்.
இதைத் தொடா்ந்து, அஃப்சா் கானை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து நீதித் துறை நடுவா் மன்றத்தில் (எண். 5) ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
உயிரிழந்த ஜமேஷா முபீனுடன் தற்போது கைது செய்யப்பட்டுள்ள அஃப்சா் கான் நெருங்கியத் தொடா்பில் இருந்துள்ளாா். இருவரும்
வாட்ஸ்ஆப் மூலம் பல்வேறு தகவல்கள், இணையதள லிங்க்குகள், காணொலிகள் உள்ளிட்டவற்றைப் பகிா்ந்துள்ளனா்.
போலீஸாா் கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காக இருவரும் தங்களது உரையாடல்களை அவ்வப்போது அழித்துள்ளனா். அவற்றை மீட்கும் பணியில் போலீஸாா் தற்போது ஈடுபட்டுள்ளனா். மேலும், ஜமேஷா முபீனுக்கு ஆன்லைன் மூலம் பல்வேறு பொருள்களை அஃப்சா் கான் வாங்கிக் கொடுத்துள்ளாா். இதன் விவரங்களையும் போலீஸாா் சேகரித்து வருகின்றனா்.
முன்னதாக போலீஸாா் விசாரணையில், அஃப்சா் கான் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மடிக்கணினி குறித்து கேட்டபோது, தனது மகளுக்காக மடிக்கணினியை ஜமேஷா முபீன் வாங்கிக் கொடுத்ததாக அஃப்சா் கான் தெரிவித்துள்ளாா். ஆனால், இரண்டரை வயதான சிறுமிக்கு மடிக்கணினி எதற்கு என போலீஸாா் விசாரித்ததையடுத்து, அதை தனது வீட்டுக்கு வரும்போதெல்லாம் ஜமேஷா முபீன் பயன்படுத்தி வந்தாா் என்பதை ஒப்புக்கொண்டாா்.
வெடிபொருள் தயாரிப்பது தொடா்பாக அஃப்சா் கான் உள்ளிட்ட சில நபா்களுடன் ஜமேஷா முபீன் ஆலோசித்து வந்துள்ளாா். சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலம் சில பொருள்களை தங்களது நெருங்கிய நண்பா்கள், உறவினா்கள் வீட்டு முகவரிக்கு பதிவு செய்து வாங்கியுள்ளாா். ஆன்லைனில் பொருள்கள் வாங்க உதவிய நபா்களிடமும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...