ஆடிப்பெருக்கு: பேரூரில் ஆயிரக்கணக்கானோர் வழிபாடு!

ஆடிப்பெருக்கையொட்டி பேரூர் படித்துறையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
பேரூரில் ஆயிரக்கணக்கானோர் வழிபாடு
பேரூரில் ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

கோவை: ஆடிப்பெருக்கையொட்டி பேரூர் படித்துறையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கையொட்டி (ஆடி 18) பேரூர் நொய்யல் ஆற்று படித்துறையில், இறந்துபோன தங்களது குழந்தைகள், திருமணம் ஆகாமல் இறந்து போன பெண்கள் ஆகியோருக்கு இலைப்படையல் வைத்து, 7 கூழாங்கற்களை கன்னிமார் தெய்வங்களாக உருவகித்து படையல் வைத்து வழிபடுவது வழக்கம். அவ்வாறு வழிபாடு செய்வதன் மூலம், இறந்து போன குழந்தைகளின் பித்ருதோஷம் நீங்கும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை.

கரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கோவில் நிர்வாகம் சார்பில் பேரூர் படித்துறையில் ஆடிப்பெருக்கு வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து கடந்த ஆண்டு கரோனா தொற்று குறைவு காரணமாக ஆடிப்பெருக்கு விழா நடத்த மாவட்டம் மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதி அளித்தது.

இந்த ஆண்டு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் ஆடிப்பெருக்கு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இதன்காரணமாக ஏராளமான பொதுமக்கள் காலை முதலே பேரூர் நொய்யல் ஆற்றுக்கு வரத் தொடங்கினர்.

நொய்யல் ஆற்றின் இருகரைகளிலும் அமர்ந்து இறந்து போன குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு இலைப் படையல் வைத்து 7 சப்த கன்னிமார் வழிபாடு செய்தனர். தொடர்ந்து அங்கிருந்த பசுமாடு கன்றுகளுக்கு அகத்திக்கீரைகள் வழங்கியதோடு நொய்யல் ஆற்றோரம் அமர்ந்திருந்த சாதுக்கள் மற்றும் பிச்சைக்காரர்களுக்கு அன்னதானங்களை வழங்கினர்.

இதேபோல் புதுமண தம்பதிகள் தாலியை மாற்றிக் கொண்டனர். திருமண மாலைகளை ஆற்றில் விட்டு வழிபாடு செய்தனர். மேலும் ஆற்றில் புனிதநீராடிவிட்டு பேரூர் பட்டீசுவரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com