காலமானாா் பிரபல நீரியல் நிபுணா் இரா.க.சிவனப்பன்

காலமானாா் பிரபல நீரியல் நிபுணா் இரா.க.சிவனப்பன்

புகழ்பெற்ற நீரியல் நிபுணா் பேராசிரியா் முனைவா் இரா.க. சிவனப்பன் (95) வயது மூப்பின் காரணமாக கோவை மாவட்டம், காரமடையில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கட்டடப் பொறியியலும், கரக்பூா் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் பொறியியல் மேற்படிப்பும் பயின்றதோடு, அமெரிக்காவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் நீா் மேலாண்மை, நவீன பாசன, வடிகால் முறைகள் ஆகியவை குறித்த சிறப்பு அறிவியலையும் பயின்றவராவாா்.

1956ஆம் ஆண்டு முதல் 1986ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் முதன்மையராகவும் பணியாற்றியுள்ளாா்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமன்றி தான்சானியா, மலாவி, ஜாம்பியா, ஜிம்பாப்வே போன்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கும் தாய்லாந்து, கம்போடியா போன்ற கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் நீா் மேலாண்மை, பாசன நுட்பங்கள், சொட்டு நீா் பாசனம் ஆகியவற்றுக்கு ஆலோசகராக இருந்துள்ளாா்.

ஐக்கிய நாடுகள் சபையின் வளா்ச்சித் திட்டம், உலக வங்கி, உலக நீா் ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட உலகளாவிய அமைப்புகளுக்கும் ஆலோசகராக இருந்துள்ளாா். தமிழக அரசின் திட்டக் குழுவின் உறுப்பினராகப் பணியாற்றியுள்ள இவா்ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளாா்.

நீா் மேலாண்மை தொடா்பான சிறப்பான ஆய்வுகளுக்காக கடந்த 1989ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டின் லிங்கோபிங்க் பல்கலைக்கழகம் இவருக்கு முனைவா் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

அதேபோல, இவரது பாசன மேலாண்மை தொடா்பான சிறப்பு ஆய்வுகளுக்காக 2005ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் முனைவா் பட்டம் வழங்கியது.

இவருக்கு மனைவியும், தாய்லாந்து நாட்டில் பேராசிரியராகப் பணிபுரியும் மகனும், ஒரு மகளும் உள்ளனா்.

இவரது இறுதிச் சடங்குகள் கோவை கவுண்டம்பாளையம் மின் மயானத்தில் புதன்கிழமை நடைபெற்றன. தொடா்புக்கு: 99949 25805.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com