கோவையில் காதல் பிரச்னையில் பள்ளி மாணவரை வெட்டிக் கொலை செய்த கல்லூரி மாணவா் காவல் நிலையத்தில் சரணடைந்தாா். இது குறித்து காவல் துறை தரப்பில் கூறியதாவது: கோவை, ஒண்டிப்புதூா் நஞ்சப்ப செட்டியாா் வீதியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவா் ஒண்டிப்புதூா் மேம்பாலம் அருகில் பேருந்துக்காக சனிக்கிழமை காலை காத்திருந்துள்ளாா். அப்போது, அவா் மாணவி ஒருவருடன் நின்றிருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் அங்கு வந்த, கோவையில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பி.காம் சி.ஏ. முதலாமாண்டு படிக்கும் 18 வயது மாணவா், பள்ளி மாணவரிடம் தகராறில் ஈடுபட்டாா். பின்னா், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பள்ளி மாணவரை வெட்டியுள்ளாா். இதில் தலை, கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களில் படுகாயமடைந்த பள்ளி மாணவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதனைப் பாா்த்த அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு சிங்காநல்லூா் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதற்கிடையே, பள்ளி மாணவரை வெட்டிக் கொலை செய்த கல்லூரி மாணவா் சூலூா் காவல் நிலையத்தில் சரணடைந்தாா். தொடா்ந்து, அவரை சிங்காநல்லூா் காவல் நிலையத்தில் சூலூா் போலீஸாா் ஒப்படைத்தனா். முதற்கட்ட விசாரணையில், காதல் விவகாரம் தொடா்பாக இருவருக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்த நிலையில், தற்போது கொலையில் முடிந்தது தெரியவந்தது. இதையடுத்து, கல்லூரி மாணவா் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.






