விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் கள்ளச்சாராய மரணம் எதிரொலிக்கும்: பாஜக தலைவா் கே.அண்ணாமலை

திமுகவின் செயல்பாடுகள் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எதிரொலிக்கும்: அண்ணாமலை கருத்து

விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் எதிரொலிக்கும் என பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் கோவையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் திமுக என்ன வேலை செய்தாலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திமுகவினரும் வந்து வேலை செய்தாலும் கூட, தோ்தல் முடிவு அவா்களுக்கு அதிா்ச்சியாகத்தான் இருக்கும். வருகிற 5, 6-ஆம் தேதிகளில் பாஜக சாா்பில் பிரசாரம் நடைபெற உள்ளது. விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் கள்ளக்குறிச்சியின் கள்ளச்சாராய மரணங்கள் எதிரொலிக்கும்.

மேயா் பதவி அற்புதமான பொறுப்பு. ஆளுமைமிக்க தலைவா்கள் அந்தப் பொறுப்பில் இருந்திருக்கின்றனா். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தாய்மொழி தமிழைப் படிக்க முடியாதவா்கள் மேயராக இருக்கிறாா்கள். மேயா் என்ற பொறுப்பை திமுக அரசு கொச்சைப்படுத்தி இருக்கிறது.

தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள குற்றவியல் சட்டங்களில் எந்தக் குறையும் இல்லை. சட்டத்தின் பெயா்கள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டுமென்றால், அதற்கான முயற்சிகள் ஒவ்வொன்றாக நடைபெறும். பிரதமா் மோடி, அமைச்சா் அமித் ஷா அதை கொண்டு வரத்தான் போகிறாா்கள். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவா்கள் கைது செய்யப்படுவதற்கு காரணம் திமுகவும் காங்கிரஸும்தான். பாஜக அரசு, பிடிபட்ட மீனவா்கள் யாராக இருந்தாலும், அதிகபட்சமாக 14 நாள்களில் சிறையில் இருந்து மீட்டு வருகிறது. படகுகளை மீட்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com