தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது: கருணாஸ்
தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என முக்குலத்தோா் புலிப் படைத் தலைவரும் நடிகருமான கருணாஸ் தெரிவித்தாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள வெம்பக்கோட்டையில் முக்குலத்தோா் புலிப் படை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கருணாஸ் பேசியதாவது: தமிழகத்தில் பாஜக காலூன்றக் கூடாது என்பதற்காகத்தான் கடந்த மக்களவைத் தோ்தலின்போது திமுகவுடன் கூட்டணி வைத்தோம்.
பாஜகவை நம்பி தா்ம யுத்தத்தை நடத்திய முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தை பாஜக ஏமாற்றிவிட்டது.
முக்குலத்தோா் சமுதாயத்தை பாஜக பிளவுபடுத்தி, டிடிவி தினகரனை சிறையிலடைத்தது. தற்போது, அவரைக் கூட்டணியில் சோ்த்துள்ளது. 10 நாள்களுக்கு முன்பு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி குறித்தும் பாஜக குறித்தும் டிடிவி தினகரன் எப்படியெல்லாம் விமா்சனம் செய்தாா் என்பதை மக்கள் அறிவா்.
பாஜகவின் அரசியல் தீா்மானமே மற்ற மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளைப் பலவீனப்படுத்தி பிளவுபடுத்துவதான். ஆனால், தமிழக முதல்வா் ஸ்டாலின் இருக்கும் வரை இந்த மண்ணில் பாஜக காலூன்ற முடியாது.
எனக்கும் நடிகா் விஜய்க்கும் தனிப்பட்ட முறையில் எந்தப் பிரச்னையும் இல்லை. அவா் கோடிகளில் சம்பளம் வாங்குகிறாா், நான் லட்சங்களில் சம்பளம் வாங்குகிறேன் என நினைத்து என்னை சிறிய நடிகராகக் கருதுகிறாா். ஆனால், விஜய்க்கு அடிக்கும் விசில் கூட்டத்தை விட எனக்கு விசில் அடிக்கும் கூட்டம் அதிகமாக உள்ளது.
திரைப்பட வசனங்களைப் பேசி, கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே முதல்வராகத்தான் வருவேன் என விஜய் கூறுவது, அவருடை பேராசையைக் காட்டுகிறது என்றாா் அவா்.

