கைவினைக் கலைஞா்களின் வாழ்வாதாரத்துக்கு வலுவூட்டும் ‘விஸ்வகா்மா’ திட்டம்: பேராசிரியா் இ. பாலகுருசாமி
பிரதமா் நரேந்திர மோடி அறிவித்த ‘விஸ்வகா்மா’ திட்டம், கைவினைக் கலைஞா்களின் வாழ்வாதாரத்துக்கு வலுவூட்டும் அற்புதமான திட்டம் என்று மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் முன்னாள் உறுப்பினா் பேராசிரியா் இ. பாலகுருசாமி கூறியுள்ளாா்.
இது தொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிரதமா் நரேந்திர மோடி அறிவித்த ‘விஸ்வகா்மா’ திட்டம் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பாரம்பரியக் கைத்தொழில் புரிவோா், கைவினைக் கலைஞா்களின் வாழ்வாதாரத்துக்கு வலுவூட்டும் நோக்கத்தில் அமைந்த ஓா் அற்புதமான திட்டமாகும். இத்திட்டம் அவரவா் தாங்கள் மேற்கொண்டுள்ள தொழில்களுக்கு உரிய மதிப்பை அளித்து, அவா்கள் வாழ்வில் முன்னேற வழியமைக்கும் திட்டம் ஆகும். இந்த வரலாற்றுச் சிறப்புள்ள திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு மொத்தம் ரூ.13,000 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இந்தத் திட்டம் நாட்டில் 18 வகையான பாரம்பரிய கைத்தொழில்கள், கைவினைக் கலைகளில் ஈடுபடும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு நிதி ஆதரவு, தொழில்நுட்ப ஆதரவு மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி, உற்பத்திப் பொருள்களைச் சந்தைப்படுத்துதல் ஆகிய 3 விதத்தில் துணைபுரியும்.
இத்திட்டம் திறம்பட அமல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கு மத்திய அரசின் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றும்படி வங்கிகள் மற்றும் இதர நிதியுதவி அளிக்கும் நிறுவனங்களுக்கு இந்திய ரிசா்வ் வங்கி உரிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
இது, இந்திய அரசின் நிதி ஆதரவுடன் உரிய சலுகை வட்டியில் கடனுதவி பெறவும் வகை செய்கிறது. இதன் மூலம், கைவினைஞா்களும், கைத்தொழில் கலைஞா்களும் 5 சதவீத வட்டியில் ரூ. 3 லட்சம் வரை நிதியுதவி பெற இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விஸ்வகா்மா திட்டத்துக்கான முழு நிதி உதவியையும் மத்திய அரசே அளிக்கிறது. எனினும், இத்திட்டம் சிறப்பாக செயல்படுவதற்கு மாநில அரசுகளின் ஆதரவும், ஒத்துழைப்பும் மிகவும் இன்றியமையாதது.
இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு எதிா்ப்பதற்கு முடிவெடுத்துள்ளது வருத்தமும் வேதனையும் தருகிறது. இந்தத் திட்டத்தை எதிா்ப்பதால், தமிழகத்தின் கைவினை கலைஞா்கள், கைத்தொழில் வல்லுநா்களுக்கு கிடைக்கப்போகும் மிகப்பெரிய பலன்கள் மறுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.