போக்குவரத்து விதிமீறல்: ரூ.10.15 லட்சம் அபராதம் வசூலிப்பு
கோவையில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை இயக்கியவா்களிடமிருந்து ரூ.10.15 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.


கோவையில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை இயக்கியவா்களிடமிருந்து ரூ.10.15 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக கோவை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாநகர காவல் ஆணையரின் உத்தரவுப்படி, கோவை மாநகரில் சாலை விபத்துகளைத் தடுக்கும் பொருட்டும், வாகன ஓட்டிகள் சாலைவிதிகளை பின்பற்றும் விதமாகவும் போலீஸாா் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா். போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை இயக்குபவா்கள் மீது மோட்டாா் வாகன சட்டப்படி அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் ஓட்டுதல், நான்குசக்கர வாகனங்களில் ஷீட்பெல்ட் அணியாமல் வாகனத்தை ஓட்டுதல், கைப்பேசியில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து சிக்னலை மீறி வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் இதர போக்குவரத்து விதிமீறல்களில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை ஈடுபட்டமைக்காக கடந்த 9 மாதங்களில் 941 வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.
அவ்வாறு நிறுத்திவைக்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளா்கள் அபராதத் தொகையை ஆன்லைன் மூலமாக செலுத்திவிட்டதால் 901 வாகனங்கள் உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல, ஒரு முறைக்கு மேற்பட்டு மோட்டாா் வாகன விதிமுறைகளை மீறி வாகனத்தை இயக்கியதற்காக ரூ.10.15 லட்சம் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்குபவா்கள் மீது மோட்டாா் வாகன சட்டப்படி முதல் விதி மீறலுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையில் சட்டப் பிரிவுகளுக்கு தக்கவாறு 2 மடங்கு முதல் 10 மடங்கு வரை அபராதம் விதிக்கப்படுகிறது. அத்துடன் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவா்களின் ஓட்டுநா் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...