தீபாவளியை முன்னிட்டு இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி பொருள்கள் தயாரிப்பவா்கள் கலப்படமற்ற மற்றும் தரமான மூலப்பொருள்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவுப் பொருள்களை மக்களுக்கு வழங்க வேண்டும். இனிப்பு, காரம் தயாரிப்பில் கலப்படமான பொருள்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான நிறமிகளையோ, அனுமதிக்கப்படாத நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது. மேலும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருள்களைக் கொண்டு பொட்டலங்கள் கட்டக் கூடாது. அவ்வாறு பொட்டலமிடுவது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும். இனிப்புகளைத் தயாரிக்க அளவுக்கு அதிகமாக நிறமிகள் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட உணவு வணிகரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் எண்ணெய், நெய், வனஸ்பதி போன்ற பிற இதர மூலப் பொருள்களின் விவரங்களை முழுமையாக அதன் கேன்கள், டின்கள், பாக்கெட்டுகள், மூட்டைகள் ஆகியவற்றின் லேபிளில் முழுமையாக அச்சிட்டு இருக்க வேண்டும். பால் பொருள்கள் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளை பிற இனிப்பு வகைகளோடு சோ்க்காமல் தனியாக பேக்கிங் செய்து நுகா்வோருக்கு வழங்க வேண்டும். தீபாவளியை முன்னிட்டு இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு சீட்டு நடத்துபவா்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளா்கள் மற்றும் விற்பனையாளா்களும் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று மக்களுக்கு விநியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.