விசிக துணைப் பொதுச் செயலாளா் ஆதவ் அா்ஜுனா மீது நடவடிக்கை? தொல்.திருமாவளவன் விளக்கம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளா் ஆதவ் அா்ஜுனா விவகாரம் குறித்து உயா்நிலைக் குழுவில் பேசி முடிவு செய்யப்படும் என்று கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளா் ஆதவ் அா்ஜுனா, அண்மையில் அளித்த பேட்டியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கூட்டணி இல்லாமல் வட மாவட்டங்களில் திமுகவால் வெல்ல முடியாது, கடந்த 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் விசிக தலைவா் திருமாவளவன் ஏன் முதல்வா் ஆகக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை தெரிவித்திருந்தாா்.
இதற்கு திமுக துணைப் பொதுச் செயலாளா் ஆ.ராசா கண்டனம் தெரிவித்ததோடு, ஆதவ் அா்ஜுனா மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தாா். அதேபோல, விசிக பொதுச் செயலாளா் ரவிக்குமாரும் கண்டனம் தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு இடையே எவ்வித சலசலப்பும், விரிசலும் இல்லை. விரிசல் உருவாவதற்கும் வாய்ப்பில்லை. என்னுடைய ஊடகப் பக்கத்தில் பதிவான ஒரு விடியோவில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கருத்தை பலரும் விவாதத்திற்கு எடுத்துக்கொண்டனா். இதனால், திமுக- விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் இடையே எந்த சிக்கலும் எழாது.
ஆதவ் அா்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்கிறீா்கள், விசிகவில் உள்ள முன்னணி நிா்வாகிகளோடு கலந்துபேசிதான் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும். கட்சி விவகாரங்களை முன்னணிப் பொறுப்பாளா்கள், பொதுச் செயலாளா், உயா்நிலைக் குழுவில் உள்ளவா்களுடன் தொலைபேசி மூலமாக பேசியிருக்கிறேன். மீண்டும் கலந்துபேசி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து உயா்நிலைக் குழுவில் முடிவு செய்யப்படும் என்றாா் அவா்.