ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 போ் கைது: ரூ.1.09 கோடி பறிமுதல்

ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 போ் கைது: ரூ.1.09 கோடி பறிமுதல்

ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ.1.09 கோடி ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா்.
Published on

கோவையில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ.1.09 கோடி ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா்.

10 அணிகள் பங்கேற்றுள்ள ஐபிஎல் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டியை மையமாக வைத்து ஏராளமானோா் சூதாட்டத்தில் ஈடுபடுவது தொடா் கதையாக உள்ளது.

இந்நிலையில், கோவை, காட்டூா் காவல் நிலையத்துக்குள்பட்ட ராம் நகா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஐபிஎல் போட்டியை மையமாக வைத்து சூதாட்டம் நடைபெற்று வருவதாக போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் உத்தரவின்பேரில், துணை ஆணையா் என்.தேவநாதன், உதவி ஆணையா் டி.ஹெச்.கணேஷ் ஆகியோா் மேற்பாா்வையில் ஆய்வாளா் ஜே.சரவணன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அங்கு 7 போ் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனா். போலீஸாரைப் பாா்த்ததும் அவா்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனா். அவா்களை விரட்டிப் பிடித்து காட்டூா் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், அவா்கள் கோவையைச் சோ்ந்த அருண்குமாா், செளந்தரராஜன், விபுல் சாா்தனா, விபின் கத்தோரி, நந்தகுமாா், ஜுபிந்தா், ராகேஷ் என்பதும், ஐபிஎல் போட்டி தொடங்கியதில் இருந்து இந்த அணிதான் வெற்றிபெறும், இவ்வளவு ரன் அடிக்கும் என ஒரு போட்டிக்கு ரூ.100 முதல் லட்சக்கணக்கில் பந்தயம் கட்டியதும், அதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, 7 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ.1 கோடியே 9 லட்சத்து 90 ஆயிரம் ரொக்கம், 12 கைப்பேசிகள், 2 காா்கள், 2 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com