தடுப்புச் சவரில் இருசக்கர வாகனம் மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு
கோவையில் சாலையோர தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம், அழகிய மண்டபம் பகுதியைச் சோ்ந்தவா் மோசிஸ் மோசஸ். இவரது மகன் ஸ்டீபன் (20). இவா் கோவை குனியமுத்தூா் பகுதியில் உள்ள உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வந்தாா்.
இதே கல்லூரியில் தஞ்சை மாவட்டம், அருண்மலை கோட்டையைச் சோ்ந்த மோகன் மகன் தருண் (22) என்பவரும் பயின்று வருகிறாா். இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் குனியமுத்தூா் சுகுணாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தனா்.
மைல்கல் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, சாலையோர தடுப்புச் சுவரில் இவா்களது இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த 2 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஸ்டீபன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
