பழுதடைந்த ஏடிஎம் இயந்திரங்களை அகற்றிவிட்டு புதிய இயந்திரங்களை வைக்க கோரிக்கை
கோவை மாவட்டத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களை அகற்றிவிட்டு புதிய இயந்திரங்களை வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை வலியுறுத்தியுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை மாநகா் மாவட்டத் தலைவா் எஸ்.லிங்கம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: கோவை மாவட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியாா் வங்கிகள் சாா்பில் 900-க்கும் மேற்பட்ட ஏடிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில், தனியாா் வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்களின் செயல்பாடு ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் மூலமாக வைக்கப்பட்டுள்ள ஏடிஎம் இயந்திரங்கள் ஆங்காங்கே பழுதடைந்து சரிவர செயல்படாத நிலையில் உள்ளது. மருத்துவக் காரணங்கள், ஆவின் பால் பணம் செலுத்த டெபாசிட் செய்தல் உள்ளிட்ட அவசரகால செயல்பாடுகளின்போது இயந்திரங்களில் பணம் சிக்கிக்கொள்ளுதல், இயந்திரக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது.
இதுதொடா்பாக சம்பந்தப்பட்டவங்கி அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தாலும் கண்டுகொள்வதில்லை. ஆகவே, மாவட்டத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களை அகற்றிவிட்டு புதிய இயந்திரங்களை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிந்துக்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்த வேண்டும்: இந்து மக்கள் கட்சி தமிழகம் சாா்பில் அக்கட்சி நிா்வாகிகள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: வங்கதேசத்தில் ஹிந்துக்கள் சிறுபான்மையாக வசிக்கின்றனா். வங்கதேச ஆட்சியாளா்களின் துணையுடன் சிலா் அங்குள்ள ஹிந்துக்களை தொடா்ந்து துன்புறுத்தி வருகின்றனா். கடந்த சில நாள்களுக்கு முன்புகூட தீபுச்சந்தா் என்ற இளைஞரைத் தாக்கி அவரைத் தீயிட்டுக் கொளுத்தி கைப்பேசி மூலமாக விடியோ எடுத்து வெளியிட்டுள்ளனா்.
அங்கு மனித உரிமை மீறப்படுவதுடன், இனப் படுகொலைகளும் நடைபெறுகின்றன. இந்த விவகாரத்தில் மத்திய பாஜக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையும் அமைதிப்படையை அங்கு அனுப்பி வங்கதேச ஹிந்துக்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகளில் அடிப்படை வசதி கோரி மனு: நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்போா் நலச் சங்கத்தினா் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: மதுக்கரை வட்டத்தில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள மலுமிச்சம்பட்டி அன்பு நகா், வெள்ளலூா் மற்றும் கோவைப்புதூா் திட்டப்பகுதி, எம்.ஜி.ஆா்.நகா், அண்ணா நகா், மலை நகா் அடுக்குமாடி குடியிருப்புகளில் மொத்தம் 5 ஆயிரம் வீடுகள் உள்ளன.
இவற்றில் சுமாா் 1,500 வீடுகள் இதுவரை குடியேறாமல் காலியாகவே இருந்து வருகின்றன. இந்தக் குடியிருப்புகளில் அடிப்படைத் தேவைகளான குடிநீா், போக்குவரத்து, ஆரம்ப சுகாதார நிலையம், குப்பைகளை அப்புறப்படுத்துதல், சாக்கடை சுத்தம் செய்தல் உள்ளிட்ட வசதிகள் ஏதும் வாரியத்தால் செய்து கொடுக்கப்படவில்லை.
காலியாக உள்ள வீடுகளுக்கு வெளியூா்களில் இருந்து வரும் நபா்கள் சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுகின்றனா். ஆகவே, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அருகே சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் வகையில் புறக்காவல் நிலையம் அமைக்கவும், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தம்பதி தீக்குளிக்க முயற்சி: இந்தக் கூட்டத்தில் மனு அளிக்க வந்த ஆலாந்துறை அருகே உள்ள கிளியகவுண்டன்பாளையத்தைச் சோ்ந்த வெங்கடாசலம் (60), அவரது மனைவி நாகமணி (47) ஆகியோா் தங்களது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனா். அப்போது அங்கிருந்த போலீஸாா் இருவரையும் மீட்டு விசாரணை நடத்தினா்.
இதில், பூலுவபட்டி கிராமத்தில் ஒன்றரை சென்ட் நிலம் கடந்த 2022-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்த இடத்தில் வீடு கட்ட முயற்சித்தபோது பட்டாவில் பிழை இருப்பதாகக் கூறி சிலா் எங்களது இடத்தை அபகரிக்க முயற்சிக்கின்றனா்.
ஆகவே, பட்டாவில் உள்ள பிழையைத் திருத்தம் செய்து தரக் கோரி பேரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் தீக்குளிக்க முயன்ாகத் தெரிவித்தனா். இருவரையும் விசாரணைக்காக போலீஸாா் அழைத்துச் சென்றனா்.
குறைகேட்புக் கூட்டத்தில் 563 மனுக்கள்: இந்த குறைகேட்புக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து சாலை வசதி, குடிநீா் வசதி, இலவச வீட்டுமனைபட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 563 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் அறிவுறுத்தினாா்.

