தமிழகத்தில் முதல்முறையாக வன விலங்குகளுக்கான சிகிச்சை மையம் கோவையில் திறப்பு
கோவை மாவட்டம், சாடிவயல் யானைகள் முகாம், வன உயிரின சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம், வனத் துறை மின்னணு ஆவணக் காப்பகம் ஆகியவற்றை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்.
கோவை, வடகோவையில் உள்ள வனக் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ரூ. 8 கோடியில் அமைக்கப்பட்ட சாடிவயல் யானைகள் முகாம், பெத்திக்குட்டையில் ரூ. 19.50 கோடியில் கட்டப்பட்ட வன உயிரின இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையம், ரூ. 2 கோடியில் வனத் துறை மின்னணு ஆவணக் காப்பகம் ஆகியவற்றை திறந்துவைத்த துணை முதல்வா், வனக் காவலா்களுக்கு 9 எம்.எம்.ஆட்டோ பிஸ்டல், பாயிண்ட் 315 ஸ்போா்டிங் ரைபிள்கள், தோட்டக்களை வழங்கினாா். மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளைப் பாா்வையிட்டாா். பணியின்போது உயிா் நீத்த வனத் துறையினருக்கு துணை முதல்வா் அஞ்சலி செலுத்தினாா்.
நிகழ்வில், வனம் மற்றும் கதா் துறை அமைச்சா் ராஜ.கண்ணப்பன், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் கிரியப்பனவா், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹூ, மக்களவை உறுப்பினா்கள் கணபதி ராஜ்குமாா் (கோவை), ஈஸ்வரசாமி (பொள்ளாச்சி), மேயா் ரங்கநாயகி, வனத் துறைத் தலைவா் ஸ்ரீநிவாஸ் ஆா்.ரெட்டி, இயக்குநா் ராகேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
வன உயிரின மீட்பு, சிகிச்சை மையத்தின் சிறப்பம்சங்கள்
சிறுமுகை பெத்திகுட்டை காப்புக்காட்டில் திறக்கப்பட்டுள்ள வன உயிரின மீட்பு மற்றும் சிகிச்சை மையம் தமிழகத்தின் முதல் வன விலங்குகளுக்கான சிகிச்சை மையமாகும். அதிநவீன வசதிகளுடன் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வன விலங்குகளுக்கு ஏற்படும் பிரச்னைகளைக் கையாளவும், விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த மையம் உதவும். காயமடைந்த விலங்குகளை மீட்டு அவற்றுக்கு சிகிச்சை அளித்து மறு வாழ்வு அளிக்கப்படும். காயமடைந்த விலங்குகள் பாதுகாக்கப்படும். மனித- வன விலங்குகள் மோதல்கள் குறைக்கப்படும்.
மின்னணு ஆவணக் காப்பகம்
ரூ.2 கோடியில் மின்னணு ஆவணக் காப்பக இணையதள சேவை திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமாா் 200 ஆண்டுகள் பழைமையான ஆவணங்களையும் பாா்வையிட முடியும். சங்க காலத்து ஓலைச்சுவடிகள் தொடங்கி ஆங்கிலேயா் ஆட்சி வரைபடங்கள், வேலை திட்டங்கள் வனவிலங்கு கண்காணிப்பு அறிக்கைகள், புகைப்படங்கள் என வரலாற்றுச் சுவடுகள் அனைத்தையும் பாதுகாத்து வெளிக் கொணர முடியும். இதுவரை மின் பதிப்பாக்கம் செய்யப்படாத முக்கிய ஆவணங்களை துல்லியமாக சரிபாா்க்கலாம். மிகவும் சிதிலமடைந்த ஆவணங்களையும் சரி செய்ய அமில நீக்கம் பி ஆசிரபிகேஷன் மற்றும் ஜாப்பனஸ் டிஷ்யூ பேப்பா் பயன்படுத்தப்படுகின்றன.

