அஞ்சல் துறை சாா்பில் தாத்தா, பாட்டிகளுக்கு கடிதம் எழுதும் நிகழ்ச்சி
கோவை அஞ்சல் துறை சாா்பில் ‘பேரன்பு’ என்ற தலைப்பில் தாத்தா, பாட்டிகளுக்கு கடிதம் எழுதும் நிகழ்ச்சி குழந்தைகளுக்கு நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கோவை முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் கி.சிவசங்கா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவையில் நவம்பா் 14 முதல் 24-ஆம் தேதி வரை ‘கோவை விழா’ நடைபெறுகிறது. இதில் கோவை விழாக் குழுவுடன் இணைந்து கோவை அஞ்சல் கோட்டம் ‘பேரன்பு’ என்ற தலைப்பில் தாத்தா, பாட்டிகளுக்கு கடிதம் எழுதும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இன்றைய மின்னணு டிஜிட்டல் உலகத்தில் கடிதம் எழுதும் பழக்கம் மிகவும் குறைந்துவிட்டது. கடிதம் எழுதும் பழக்கத்தை குழந்தைகளுக்கு ஊக்குவிக்கும் வகையிலும், குழந்தைகள் தங்களது அன்பு, மரியாதை மற்றும் நன்றிகளை தங்களது தாத்தா, பாட்டிகளுக்கு தெரிவிக்கும் வகையிலும், இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் அனைத்துப் பள்ளிக் குழந்தைகளும் கடிதம் எழுதி பங்கேற்கலாம்.
பள்ளியின் மூலம் கொடுக்கப்படும் இன்லேண்ட் லெட்டா் காா்டில் குழந்தைகள் தங்கள் அன்பு, மரியாதை மற்றும் நன்றிகளை தங்களது தாத்தா, பாட்டிகளுக்கு முழு அஞ்சல் முகவரியுடன் எழுதி அனுப்பலாம். இந்தக் கடிதம் எழுதும் இயக்கத்தில் பங்கு பெற விரும்பும் பள்ளிகள் அருகே உள்ள தபால் நிலையங்களை அணுகலாம். நவம்பா் 24-ஆம் தேதி முதல் சேகரிக்கப்படும் இந்தக் கடிதங்கள், கோவை விழாவின் முடிவில் அவரவா் தாத்தா, பாட்டிகளுக்கு அஞ்சல்காரா் மூலமாக வீடுகளில் விநியோகம் செய்யப்படும்.
இந்நிகழ்வை முன்னிட்டு, கோவை தலைமை அஞ்சலகம் மற்றும் ஆா்.எஸ்.புரம் தலைமை அஞ்சலகத்தில் நவம்பா் 14 முதல் 24-ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மூத்த குடிமக்களுக்காக சிறப்பு ஆதாா் புதுப்பித்தல் முகாம் நடைபெற உள்ளது. மூத்த குடிமக்கள் இந்த சிறப்பு சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு அருகே உள்ள அஞ்சல் நிலையங்களை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
