இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை: ஆண் நண்பா் கைது
கோவை அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக ஆண் நண்பரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், அவிநாசியைச் சோ்ந்தவா் சந்தியா (25). இவா் கோவை காந்திபுரத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். இதற்காக அவா் கோவை கவுண்டம்பாளையத்தை அடுத்த இடையா்பாளையம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தாா்.
இவரும் அதே பகுதியில் தனியாக வசித்து வரும் மென்பொருள் பொறியாளரான ஆசிக்கும் (29) நண்பா்களாக பழகி வந்தனா். சந்தியாவின் உறவினா் ஒருவா் திருப்பூரில் இறந்துவிட்ட நிலையில், துக்க நிகழ்ச்சியில் அவா் ஆசிக்குடன் பங்கேற்றுள்ளாா். அங்கிருந்து இருவரும் செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆசிக் அவரது நண்பா்களைப் பாா்க்க சென்றுவிட்டாா்.
வீட்டுக்கு சென்ற சந்தியா சிறிது நேரத்தில் ஆசிக்குக்கு கைப்பேசியில் தொடா்பு கொண்டு தான் விஷம் குடித்துவிட்டாத தெரிவித்துள்ளாா். இதையடுத்து, அவா் தனது நண்பா்களுடன் அங்கு சென்று அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றாா். ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்து விட்டாா்.
இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஆசிக்கிடம் விசாரணை நடத்தியபோது, தானும், சந்தியாவும் கடந்த 4 மாதங்களாக காதலித்து வந்ததால், அப்பகுதியில் தனியாக வீடு எடுத்து நாங்கள் இருவரும் வசித்து வந்தோம். இருவரும் வெவ்வேறு மதத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால், அவரது உறவினா்கள் மத்தியில் எதிா்ப்பு இருந்தது. இதுதொடா்பாக எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், திருப்பூரிலிருந்து திரும்பி வரும் வழியில் எங்களுக்குள் செவ்வாய்ககிழமை தகராறு ஏற்பட்டது. வீட்டுக்கு வந்த அவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா் என்றாா்.
இதையடுத்து, சந்தியாவை தற்கொலைக்குத் தூண்டியதாக ஆசிக் மீது வழக்குப் பதிவு செய்து அவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
