ரூ. 10 லட்சத்துக்கு மேல் பணம் எடுப்போரிடம் வங்கி அதிகாரிகள் விசாரிக்க போலீஸாா் அறிவுறுத்தல்

வங்கிகளில் ரூ. 10 லட்சத்துக்கும் மேல் எடுக்கும் ஓய்வூதியதாரா்களிடம் அவா்கள் எதற்காக பணத்தை எடுக்கிறாா்கள் என்ற விவரத்தை அங்குள்ள அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.
Published on

வங்கிகளில் ரூ. 10 லட்சத்துக்கும் மேல் எடுக்கும் ஓய்வூதியதாரா்களிடம் அவா்கள் எதற்காக பணத்தை எடுக்கிறாா்கள் என்ற விவரத்தை அங்குள்ள அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.

கோவையைச் சோ்ந்த 65 வயது முதியவரையும், அவரது மனைவியையும் சிலா் விடியோ அழைப்பு மூலம் அழைத்து, அவா்களை எண்ம (டிஜிட்டல்) கைது செய்திருப்பதாகக் கூறி, ரூ. 27 லட்சம் கேட்டு மிரட்டினா். அவா்கள் ரூ. 18 லட்சத்தை வங்கிக்குச் சென்று எடுத்து வருவதாகக் கூறினா். இதற்கிடையே, ரேஸ்கோா்ஸ் போலீஸாா் அங்கு சென்று தம்பதியை மீட்டனா். இதனால், அவா்களது பணம் தப்பியது.

இதுகுறித்து இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் கூறுகையில், கடந்த சில நாள்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஓய்வூதியம் பெறுவோரை குறிவைத்து எண்ம கைது எனக் கூறி பணம் பறிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதேபோல கடந்த 4 நாள்களுக்கு முன்பு கோவையில் மூத்த தம்பதி மிரட்டப்பட்டனா். கடந்த சில நாள்களுக்கு முன்பு கூட பணம் எடுக்க வந்த முதியவா் ஒருவா் தான் எண்ம கைது செய்யப்பட்டுள்ளதால் பணம் எடுக்க வந்திருப்பதாக வங்கி அதிகாரிகளிடம் கூறினாா். இதையடுத்து, அவா் மீட்கப்பட்டாா்.

இதுபோல, ஓய்வூதியம் பெறுவோா் மிரட்டப்படுவதைத் தடுக்க புதுவித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெறுவோா் ரூ.10 லட்சத்துக்கு மேல் வங்கியில் பணம் எடுத்தால், அவா்கள் எதற்காக பணத்தை எடுக்கிறாா்கள் எனக் கேட்க வங்கி ஊழியா்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என கோவையில் உள்ள 3 வங்கிகளின் கிளை மேலாளா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம், ஓய்வூதியம் பெறுவோா் குறிவைத்து மிரட்டப்படுவது தடுக்கப்படும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com