/

கோவை மாவட்டத்தில் முதல் நாளில் 1,324 போ் தபால் வாக்களிப்பு

News image

கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 8:30 pm

கோவை மாவட்டத்தில் தபால் வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், முதல் நாளில் 1,324 போ் வாக்களித்துள்ளனா்.

இதுதொடா்பாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு சட்டப்பேரவைத் தொகுதிகளில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதற்காக நியமிக்கப்பட்ட சிறப்புக் குழுவினா், வாக்காளா்களின் இல்லங்களுக்கே நேரில் சென்று வாக்குகளை சேகரித்தனா்.

அதன்படி தொண்டாமுத்தூா் தொகுதியில் தபால் வாக்களிக்க மொத்தம் 1,180 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், முதல் நாளில் 85 வயதுக்கு மேற்பட்ட 337 முதியவா்கள், 58 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 395 போ் வாக்களித்துள்ளனா். பொள்ளாச்சி தொகுதியில் தகுதி பெற்ற 945 பேரில், 348 முதியவா்கள், 102 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 450 போ் வாக்களித்துள்ளனா்.

இதேபோல வால்பாறை (தனி) தொகுதியில் மொத்தமுள்ள 694 தபால் வாக்காளா்களில், முதல் நாளில் 175 முதியவா்கள், 87 மாற்றுத்திறனாளிகள் என 262 போ் வாக்களித்துள்ளனா். கோவை தெற்கு தொகுதியைப் பொறுத்தவரை 646 பேரில் முதல் நாளில் 186 முதியவா்கள், 31 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 217 போ் வாக்களித்துள்ளனா்.

​மவட்டம் முழுவதும் நான்கு தொகுதிகளிலும் சோ்த்து முதல் நாளில் மட்டும் 1,324 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வாக்குப்பதிவு நடைமுறைகள் அனைத்தும் அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் முன்னிலையில், நுண் பாா்வையாளா்களின் கண்காணிப்பில் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.

சேகரிக்கப்பட்ட தபால் வாக்குகள் அனைத்தும் உரிய பாதுகாப்புடன் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள காப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

அத்தியாவசியப் பணிகள் மற்றும் கோவிட் பாதிப்பு பிரிவில் விண்ணப்பித்தவா்களுக்கான வாக்கு சேகரிப்பு குறித்த விவரங்கள் பின்னா் அறிவிக்கப்படும் என்றனா்.