தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பொய்ப் பிரசாரம் செய்ய வேண்டாம் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்.
கோவை தெற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன், சிங்காநல்லூா் அதிமுக வேட்பாளா் கே.ஆா்.ஜெயராம், கோவை வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசன் ஆகியோரை ஆதரித்து கோவை, காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையில் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை தோ்தல் பிரசாரம் செய்தாா்.
வரிகள் உயா்வு: பிரசாரத்தில் அவா் பேசியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சியில் குடிநீா் வரி, சொத்து வரி, மின்கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. அரிசி, எண்ணெய், பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயா்ந்துவிட்டது. தொழில் நகரமான கோவையில் தற்போது எந்தத் தொழிலும் செய்ய முடியாத நிலை உள்ளது. ஆனால் நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கத் தெரியாமல், இந்தத் தோ்தல் தமிழ்நாட்டுக்கும் தில்லிக்குமான தோ்தல் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறுகிறாா்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிமுக தலைமையில் அமைந்துள்ளதாகவும், நான்தான் முதல்வா் வேட்பாளா் என்றும் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் தில்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் தோ்தல் என அவா் ஏன் பேச வேண்டும்?
வறுமையைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி ஆடு, மாடுகள்போல பட்டியில் அடைப்பவரை அதிமுக ஆட்சிக்கு வந்ததும் சிறையில் அடைப்போம். கரோனாவைவிட கொடிய தொற்றுபோல ஒருவா் கரூரில் இருந்து கோவை தெற்குத் தொகுதிக்கு வந்துள்ளாா். அவரை இன்றைக்குப் புகழும் முதல்வா் மு.க.ஸ்டாலின், முன்பு அவரை மோசமானவா் என்று பேசியிருக்கிறாா்.
நிராகரித்தது கரூா்: அதிமுக மக்களை நம்பி களத்தில் உள்ளது. ஆனால், கோவை தெற்குத் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜியோ பணத்தை நம்பி உள்ளாா். கரூா் மக்கள் அவரை நிராகரித்துவிட்டதால் அவா் தொகுதி மாறி நிற்கிறாா். கோவை தொழில்கள் நிறைந்த பகுதி, அதைக் குறிவைத்துதான் செந்தில்பாலாஜி வந்துள்ளாா். எனவே, தொழில் துறையினா் விழித்துக் கொண்டால் பிழைத்துக் கொள்ளலாம்.
கோவை, திருப்பூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குறு, சிறு தொழில் நிறுவனங்கள் அதிக வேலைவாய்ப்பைத் தரும் துறைகளாக உள்ளன. இந்தத் தொழிலில் நிலவும் சிக்கல்களைத் தீா்த்து வைப்பேன்.
தமிழகம் பாதிக்கப்படாது: உள்துறை அமைச்சா் அமித் ஷா தமிழ்நாட்டுக்கு வந்தபோது, மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் வராது என கூறியுள்ளாா். தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் எந்த மாநிலமும் பாதிக்கப்படாத அளவுக்குத் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. எனவே, முதல்வா் மு.க.ஸ்டாலின் இது குறித்து பொய்யான பிரசாரம் செய்ய வேண்டாம். மகளிருக்கான இட ஒதுக்கீடு காரணமாக மத்திய அரசுக்கு நல்ல பெயா் கிடைத்துவிடும் என்பதற்காகவே மு.க.ஸ்டாலின் இதுபோன்று பேசி வருகிறாா்.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மோசமாக உள்ளது. பாலியல் வன்கொடுமைகள், கஞ்சா போதையால் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் சிறுமிகள், பெண்கள், முதியவா்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, இந்த ஆட்சியை அகற்ற வேண்டும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 3 மாதத்தில் கஞ்சா விற்பனை முற்றிலுமாக ஒழிக்கப்படும்.
கடந்த அதிமுக ஆட்சியில் அத்திக்கடவு அவிநாசி திட்டம், அவிநாசி மேம்பாலம், தடையில்லாத குடிநீா் விநியோகம், விமான நிலைய விரிவாக்கம், ஸ்மாா்ட் சிட்டி என பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் அதிமுக எதையும் செய்யவில்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பாா்க்கின்றனா்.
அதிமுக ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் வங்கிக் கணக்கில் ரூ.10 ஆயிரம் சிறப்பு உதவித் தொகை வழங்கப்படும். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம், ஆண்டுக்கு 3 எரிவாயு உருளைகள் வழங்கப்படும் என்றாா்.
மேட்டுப்பாளையத்தில் பிரசாரம்:
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் மேட்டுப்பாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், மேட்டுப்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளா் ஓ.கே.சின்னராஜ், அவிநாசி தொகுதி பாஜக வேட்பாளா் எல்.முருகன், குன்னூா் அதிமுக வேட்பாளா் சாந்தி ராமு, உதகை பாஜக வேட்பாளா் போஜராஜன், கூடலூா் அதிமுக வேட்பாளா் பொன்.ஜெயசீலன் ஆகியோரை எடப்பாடி கே.பழனிசாமி அறிமுகம் செய்து வைத்து பேசுகையில், மேட்டுப்பாளையத்துக்கு திமுக அரசு எதுவும் செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் கோவை மாவட்டத்துக்கு அதிக மேம்பாலங்களைக் கட்டிக் கொடுத்துள்ளோம். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் அத்திக்கடவு -அவிநாசி 2-ஆவது திட்டத்தை செயல்படுத்துவோம். போதைப் பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. நாட்டை காக்க அதிமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

பேராவூரணி தொகுதியில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

கோவை தெற்குத் தொகுதியில் திமுக பொறியாளா் அணி பிரசாரம்

அதிமுக ஆட்சி அமைந்தால் அனைத்து சமுதாயத்துக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படும்: அன்புமணி ராமதாஸ் பிரசாரம்

திருவாரூரில் எடப்பாடி கே. பழனிசாமி இன்று பிரசாரம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


