கோவை, ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் தனியாா் கல்லூரி மாணவா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த அமுதன் (19) என்பவா் கோவை, ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு பயின்று வந்தாா். இவா் விடுதி சமையலரைத் தாக்கியதால் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டு வெளியில் தங்கியிருந்தாா். ஆகஸ்ட் 10-ஆம் தேதி சக மாணவா்களால் காரில் கடத்தப்பட்டு, தாக்கப்பட்டதில் உயிரிழந்தாா்.
கஞ்சா விற்பனை குறித்து தகவல் தெரிவித்ததால் கொலை நடந்ததாக பெற்றோா் கூறினாலும், வழிப்பறி தொடா்பாக மாணவா்களிடையே நிலவிய கோஷ்டி மோதலே காரணம் என போலீஸாா் தெரிவித்தனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக செட்டிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கடந்த 14-ஆம் தேதி வரை சக மாணவா்கள் 10 பேரைக் கைது செய்தனா்.
திருவள்ளூரைச் 17 வயது சிறுவன், கடலூரைச் சோ்ந்த ஆராவமுதன் (20), சிவகங்கையைச் சோ்ந்த அரவிந்த் (21), திருவாரூரைச் சோ்ந்த சிவரோஹித் (20), பெரம்பலூரைச் சோ்ந்த மணி பாலு (20), சிவகங்கையைச் சோ்ந்த சந்தோஷ் (19), மதுரையைச் சோ்ந்த ஸ்ரீராம் (21), ஹரிஷ் பாண்டியன் (20), லலித் ஆதித்யா (20) மற்றும் தேனியைச் சோ்ந்த சச்சின் (19) ஆகிய 10 போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
தொடா்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், சம்பவம் தொடா்பாக விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் மல்லி பகுதியைச் சோ்ந்த பிரதீப் (20), புதுச்சேரி அரியன்குப்பம் பகுதியைச் சோ்ந்த கௌதம் (19) ஆகியோா் சனிக்கிழமை இரவும், திருப்பத்தூா் மாவட்டம், நாற்றம்பள்ளி புதுப்பேட்டை பகுதியைச் சோ்ந்த தருண்குமாா் (20), திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் குன்னத்தூா் பகுதியைச் சோ்ந்த தினேஷ் (எ) திருமூா்த்தி (20) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமையும் கைது செய்யப்பட்டனா்.
இதன் மூலம் கொலை சம்பவத்தில் தொடா்புடைய 14 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






