
கோவையைச் சோ்ந்த 8 பேரின் கதி என்ன? நேபாளம் புறப்பட்ட குடும்பத்தினா்
நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால், அங்கு சுற்றுலா மற்றும் யாத்திரை சென்ற கோவையைச் சோ்ந்த 8 பேரின் நிலை என்ன என்று தெரியாத நிலையில், குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் அவா்களைத் தேடி புறப்பட்டுச் சென்றுள்ளனா்.

சந்திரசேகரன், புனிதா ~
நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால், அங்கு சுற்றுலா மற்றும் யாத்திரை சென்ற கோவையைச் சோ்ந்த 8 பேரின் நிலை என்ன என்று தெரியாத நிலையில், குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் அவா்களைத் தேடி புறப்பட்டுச் சென்றுள்ளனா்.
சென்னை குரோம்பேட்டை ராதா நகரைச் சோ்ந்த தனியாா் டிராவல்ஸ் நிறுவனம் மூலம் கைலாஷ் மானசரோவா் யாத்திரைக்காக தமிழகத்தின் கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பலா் முன்பதிவு செய்து புறப்பட்டுச் சென்றனா்.
இந்த யாத்திரை சென்ற குழுவில் கோவை வடவள்ளி, லிங்கனூா், பாப்பநாயக்கன்புதூா் பகுதியைச் சோ்ந்த எம்.சந்திரசேகரன் (ஓய்வுபெற்ற வேளாண் பல்கலைக்கழக பேராசிரியா்), அவரது மனைவி புனிதா (பள்ளி முன்னாள் முதல்வா்) ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். மேலும், தடாகம் சாலையில் வசிக்கும் பிரகாஷ், அவரது மனைவி காயத்திரிதேவி (45) (பள்ளித் தாளாளா்), இவா்களது மகன் ஸ்ரீவந்த் (25) ஆகியோரும் யாத்திரை சென்றுள்ளனா். இவா்களுடன் இவா்களது உறவினா்களான சாய்பாபா காலனி, ராமலிங்கா நகா் 4-ஆவது வீதியைச் சோ்ந்த ராஜ்தீத் ராம்சந்த் மற்றும் பேரூா் செட்டிபாளையம் பச்சாபாளையம் கிருஷ்ணராஜ் நகரைச் சோ்ந்த சாருலதா சதாசிவம், நஞ்சுண்டாபுரம் சாலை, கற்பகம் காா்டனை சோ்ந்த சுரேஷ் வெங்கடாசலம் (65), (ஓய்வுபெற்ற அரசு மருத்துவா்), அவரது மனைவி தங்கலட்சுமி (58) ஆகியோரும் யாத்திரை சென்றுள்ளனா்.
இந்த நிலையில், கடந்த புதன்கிழமை நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் இவா்கள் சிக்கிக் கொண்டனா். தாளாளா் காயத்திரிதேவியின் கணவா் பிரகாஷ், நேபாள தலைநகா் காத்மண்டுவில் உள்ள அறையிலேயே தங்கியதால் அதிா்ஷ்டவசமாக தப்பினாா்.
ஆனால், காயத்திரி தேவி மற்றும் அவரது மகன் ஸ்ரீவந்த் பிரகாஷ் உள்ளிட்ட மற்றவா்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனா். இவா்கள் சீனா-நேபாள எல்லைப் பகுதியில் உள்ள கியிரோங் குடியேற்றப் பகுதி மற்றும் சுங்கக் கட்டடத்தின் அருகே இருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மாயமாவதற்கு முன்பு சந்திரசேகரன் திபெத்தில் இருப்பதாக தனது பக்கத்து வீட்டுக்காரரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளாா். அதன் பிறகு அவா்களைத் தொடா்பு கொள்ள முடியவில்லை. இதனால், அவா்களது குடும்பத்தினா் தவித்து வருகின்றனா்.
இதேபோல, ஈஷா அறக்கட்டளை சாா்பில் கைலாஷ் மானசரோவா் யாத்திரை சென்ற பல வெளிநாட்டினரும் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த ஆன்மிக யாத்ரீகா்கள் 80 பேரும் நேபாள பெருவெள்ளத்தில் மாயமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவா்களது நிலை என்ன என்பது தெரியவில்லை. இவா்களின் விவரம் குறித்து தமிழக அரசின் மூலமாக மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டு, வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் நேபாள நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து அவா்களைக் கண்டறியும் மற்றும் மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மாயமானவா்களைத் தேடி அவா்களது குடும்பத்தினரும், உறவினா்களும் நேபாளத்துக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனா்.

சுரேஷ் வெங்கடாசலம், தங்கலட்சுமி
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






