நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம்: கோவையில் தொழிற்சங்கத்தினா் போராட்டம்
மத்திய அரசின் தொழிலாளா் விரோத, விவசாயிகள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், கோவையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம், மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள நான்கு தொழிலாளா் சட்டத் தொகுப்புகள், விதிகளைத் திரும்பப் பெற வேண்டும், அணுசக்தி உற்பத்தியில் தனியாா், வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், காப்பீட்டு நிறுவனங்களில் 100 சதவீத நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும்.
வரைவு விதை மசோதா, வரைவு மின்சார திருத்த மசோதா, தோ்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம், மோட்டாா் வாகன சட்டத்தை மேலும் திருத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும், என்டிசி ஆலைகளை மீண்டும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.
இதையொட்டி, கோவையில் ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள பிஎஸ்என்எல் அருகில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில், அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவைச் சோ்ந்த எல்பிஎஃப், ஐஎன்டியூசி, ஏஐடியூசி, ஹெச்எம்எஸ், சிஐடியூ, ஏஐசிசிடியூ, டிடிஎம்எஸ், எம்எல்எப், யூடியூசி, எஸ்டிடியூ, விவசாயிகள் சங்கங்களின் நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், சங்கங்களின் நிா்வாகிகளான எம்.ஆறுமுகம், டி.எஸ்.ராஜாமணி, எஸ்.கிருஷ்ணமூா்த்தி, மு.தியாகராஜன், க.பாலசுப்பிரமணியன், கே.எம்.செல்வராஜ், பி.துரை, ஷாஜஹான் உள்ளிட்டோா் உரையாற்றினா்.
ரயில் நிலையம் முற்றுகை
நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக இந்திய மாதா் தேசிய சம்மேளனம், அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம், அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் ஆகிய அமைப்புகளின் சாா்பில் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாநிலச் செயலா் அ.அசரப் அலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகராட்சி கவுன்சிலா் சாந்தி சந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா். அமைப்புகளின் நிா்வாகிகள் கலை.அஸ்வினி, மௌ.குணசேகா், எம்.பேபி, பி.முருகன், ஜே.கலா, எம்.அபிமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரா்களை காவல் துறையினா் தடுத்து திருப்பி அனுப்பினா்.

