யானை-மனித மோதலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை: டாப்சிலிப்பிலிருந்து சாடிவயல் முகாமுக்கு 2 கும்கிகள் இடமாற்றம்
கோவை மாவட்டத்தில் வனத்தையொட்டிய கிராமங்களில் யானை-மனித மோதல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக டாப்சிலிப் முகாமிலிருந்து இரு கும்கி யானைகள் சாடிவயல் முகாமுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
கோவை வனக் கோட்டத்துக்கு உள்பட்ட சிறுவாணி, சாடிவயல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக ஒற்றை யானை மற்றும் காட்டு யானை கூட்டங்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவை விளைநிலங்களுக்குள் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்துவதுடன், மனித உயிரிழப்புகளுக்கும் காரணமாகி வந்தன. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வந்த நிலையில், காட்டு யானைகளை விரட்டவும், கண்காணிக்கவும் தகுந்த கும்கி யானைகளின் தேவை அவசியமானது.
ஏற்கெனவே, சாடிவயல் முகாமிலிருந்த சில கும்கி யானைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டதால், கடந்த சில வாரங்களாக முகாம் வெறிச்சோடி காணப்பட்டது. இந்த நிலையில், வனத் துறையின் ஆலோசனையின்பேரில், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமிலிருந்து அனுபவம் வாய்ந்த கும்கிகளான முத்து மற்றும் காவேரி ஆகியவற்றை இடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், இந்த இரு யானைகளும் லாரிகள் மூலம் பலத்த பாதுகாப்புடன் சாடிவயல் கொண்டுவரப்பட்டன. முத்து மற்றும் காவேரிக்கு வனத் துறையினா் மற்றும் பாகன்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறுகையில், சாடிவயல் முகாமில் கும்கிகள் இல்லாதது பெரும் குறையாக இருந்தது. தற்போது இந்த இரு யானைகளின் வருகையால், காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தால் உடனடியாக வனத் துறையினரால் நடவடிக்கை எடுக்க முடியும். இது வன எல்லையோர கிராம மக்களுக்குப் பெரும் நிம்மதியைத் தந்துள்ளது என்றனா்.
இதுகுறித்து வனத் துறை அதிகாரிகள் கூறுகையில், முத்து மற்றும் காவேரி ஆகிய இரு யானைகளும் இனி சாடிவயலில் தங்கியிருந்து ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தப்படும். காட்டு யானைகள் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைவதைத் தடுத்து, அவற்றை வனத்துக்குள் விரட்டும் பணிகளில் இந்த கும்கிகள் முக்கியப் பங்கு வகிக்கும் எனத் தெரிவித்தனா்.
இந்த நடவடிக்கையின் மூலம் கோவை மாவட்டத்தின் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரக் கிராமங்களில் யானை-மனித மோதல்கள் கணிசமாகக் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

