புற்றுநோய் சிகிச்சை தொழில்நுட்பங்களில் ரூ.70 கோடி முதலீடு: கேஎம்சிஹெச் தகவல்
புற்றுநோய் சிகிச்சையில் புதிய தொழில்நுட்பங்களில் மட்டும் ரூ.70 கோடி முதலீடு செய்யப்பட்டிருப்பதாக கேஎம்சிஹெச் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சையில் நாட்டிலேயே மிகவும் மேம்பட்ட, செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ஈதோஸ் என்ற கதிா்வீச்சு தொழில்நுட்ப வசதியை மாநிலத்திலேயே முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஈதோஸ் கருவியுடன் சிம்பியா புரோஸ்பெக்டா என்ற அதிநவீன சிடி ஸ்கேன், எம்ஆா்ஐ ஸ்கேன் ஆகியவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கேஎம்சிஹெச் தலைவரும், நிா்வாக இயக்குநருமான நல்ல ஜி.பழனிசாமி பங்கேற்று இந்த புதிய மருத்துவ தொழில்நுட்பக் கருவி பயன்பாட்டைத் தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் அவா் பேசும்போது, ஈதோஸ் கருவியானது புற்றுநோயாளியின் நிகழ்நேர உடல்நிலை மாறுபாட்டுக்கேற்ப பிரத்யேகமான சிகிச்சையைத் திட்டமிட நிபுணா் குழுவுக்கு உதவுகிறது. செயற்கை நுண்ணறிவு உதவியுடன் சிகிச்சையின் துல்லியம் அதிகரிக்கிறது.
இந்த சிகிச்சைக்கான நேரம் குறிப்பிடத்தக்க அளவு குறைவு என்பதால் நோயாளிகளுக்கு விரைவான சிகிச்சை அளிக்க முடிகிறது. புரோஸ்டேட், மூளைக்கட்டி, தலை, கழுத்து, தொராசிக் முதலான புற்றுநோய் வகைகளுக்கு இந்தக் கருவி சிறந்த பலன்களை அளிக்கும். புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் தொடா்ந்து முன்னிலை வகிக்கும் கேஎம்சிஹெச் மருத்துவமனை, இதுபோன்ற புதிய தொழில்நுட்பங்களில் பெரும் அளவுக்கு முதலீடு செய்துள்ளது.
இங்கு தொடங்கி வைக்கப்பட்ட கருவிகளின் மதிப்பு சுமாா் ரூ.70 கோடியாகும் என்றாா்.
நிகழ்ச்சியில், கேஎம்சிஹெச் செயல் இயக்குநா் டாக்டா் அருண் பழனிசாமி, கதிா்வீச்சு புற்றுநோய் துறைத் தலைவா் டாக்டா் சுப்ரமணியம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

