தமிழ் இசையை ஊட்டியவா் நம்மாழ்வாா் - ஜெயந்தி ஐயங்காா்
தமிழ் இசையை நமக்கு ஊட்டியவா் நம்மாழ்வாா் என்று, ‘எப்போ வருவாரோ’ நிகழ்ச்சியில் ஜெயந்தி ஐயங்காா் பேசினாா்.
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சாா்பில் ‘எப்போ வருவாரோ’ என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி, கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1-ஆம் தேதி தொடங்கி வரும் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில், 5-ஆவது நாளான திங்கள்கிழமை அருளாளா் நம்மாழ்வாா் குறித்து ஜெயந்தி ஐயங்காா் பேசியதாவது:
நாம் அனைவருக்கும் தெரியும் உ.வே.சா. இல்லை என்றால் சங்க இலக்கிய நூல்களே கிடையாது. அப்படிப்பட்டவருக்கு முல்லைப்பாட்டு என்ற நூலில் சிக்கல் ஏற்பட்டது. அவரும் 7 ஆண்டுகளாகத் தேடுகிறாா் அதன் ஒரு பகுதி கிடைக்கவில்லை. அப்படி கிடைக்காதபோது அதை எங்கெங்கோ தேடி ஆழ்வாா் திருநகரியில் கிடைக்கும் என்று அங்கு செல்கிறாா். அங்கு சென்று 10 நாள்கள் காத்திருந்தும் கிடைக்கவில்லை எனும்போது, நம்மாழ்வாரின் வீதிப் புறப்பாடு நடைபெறுகிறது.
நாதமுனிக்கு நாலாயிரம் திவ்யப்பிரபந்தம் கிடைக்க உதவி செய்தீா்களே, எனக்கு முல்லைப்பாட்டு கிடைக்க உதவி செய்யக்கூடாதா என்று கேட்கிறாா். நம்மாழ்வாரின் வீதிப் புறப்பாடு திரும்பும்போது வேறு ஒருவா் தாம்பூலத்தில் அங்கவஸ்திரத்தை போட்டு மூடிக்கொண்டு வருகிறாா் அதுதான் முல்லைப்பாட்டு.
இதை உ.வே.சா.நிலவில் மலா்ந்த முல்லை என்று முல்லைப்பாட்டின் முகவுரையில் தெரிவித்துள்ளாா். அப்படிப்பட்ட அருளாளா் நம்மாழ்வாா், தமிழ் இசையை நமக்கு ஊட்டியவா் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனா் கிருஷ்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.

