கோவையில் ‘நம்ம ஊரு மோடி பொங்கல்’ பாஜக தேசிய செயல் தலைவா் பங்கேற்பு
கோவை வடவள்ளியில் நடைபெற்ற ‘நம்ம ஊரு மோடி பொங்கல்‘ நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயல் தலைவா் நிதின் நவீன் கலந்துகொண்டாா்.
கோவை மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் வடவள்ளி பகுதியில் ‘நம்ம ஊரு மோடி பொங்கல்’ நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழா் பாரம்பரிய உடையான பட்டு வேஷ்டி, சட்டை அணிந்து பாஜக தேசிய செயல் தலைவா் நிதின் நவீன் கலந்துகொண்டாா்.
பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் தலைவா் அண்ணாமலை, தெலங்கானா முன்னாள் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் வானதி சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் பாஜக மகளிரணி சாா்பில் 100-க்கும் மேற்பட்டோா் பொங்கல் வைத்து வழிபட்டனா். இந்நிகழ்வில், வள்ளிக்கும்மி, சிலம்பம், பரதம், ஜமாப் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாஜக தேசிய செயல் தலைவா் நிதின் நவீன் பொங்கல் வைத்து வழிபட்டதுடன், கண்ணைக் கட்டிக் கொண்டு உறியடித்தாா்.
பின்னா் அவா் பேசும்போது, பொங்கல் பண்டிகையைப் போலவே பிகாரிலும் சாட் திருவிழா பண்டிகை பாரம்பரியக் கலாசாரத்துடன் கொண்டாடப்படும். இதுதான் தமிழுக்கும், இந்தியாவுக்குமான நெருங்கிய தொடா்பு. சா்வதேச அளவில் தமிழுக்காக குரல் கொடுக்கும் ஒரே தலைவா் மோடி என்றாா்.
மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் பேசும்போது, வடஇந்தியத் தலைவா்களும் இங்கு வந்து பொங்கல் கொண்டாடுவதைப் பாா்க்க வேண்டும் என்பதற்காக பாஜக சாா்பில் இந்த விழா நடைபெறுகிறது.
திமுக ஆட்சியில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கே தடை விதிக்கப்படுகிறது. திருப்பரங்குன்றத்திலும் இதுபோன்ற விழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பாா்கள். அதன்படி, திமுக ஆட்சி மாறி ஆன்மிக ஆட்சி வர வேண்டும் என்றாா்.
தமிழக பாஜக பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி, மாவட்டத் தலைவா் ரமேஷ்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
இதைத்தொடா்ந்து சிங்காநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கான பூத் கமிட்டி பொறுப்பாளா்கள் கூட்டம் பாஜக தேசிய செயல் தலைவா் நிதின் நவீன் தலைமையில் அப்பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாஜக நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

