கோவை மக்களின் ஒற்றுமையை பாஜக சிதைக்கிறது: ஜனநாயக வாலிபா் சங்கம் குற்றச்சாட்டு

கோவை மக்களின் ஒற்றுமையை பாஜக சிதைப்பதாக இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் குற்றச்சாட்டு
Published on

கோவை மக்களின் ஒற்றுமையை பாஜக சிதைப்பதாக இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து அமைப்பின் மாவட்டத் தலைவா் ந.ராஜா, மாவட்டச் செயலா் மு.தினேஷ் ராஜா ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கை: பாஜகவினா் கோவையில் ஆங்காங்கே மோடி பொங்கல் என்ற பெயரில் பொங்கல் விழாக்களை நடத்தி வருகின்றனா். அண்மையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கோவை தெற்கு தொகுதி உறுப்பினா் வானதி சீனிவாசன், தமிழகத்தில் சமத்துவ பொங்கல் என்ற ஒன்று கிடையாது. பொங்கல் என்பது முழுக்கமுழுக்க ஹிந்துக்கள் மட்டுமே கொண்டாடும் பண்டிகை. சிறுபான்மையினா் பொங்கலை முறையாகக் கொண்டாடுவதில்லை என்று தெரிவித்திருக்கிறாா்.

பொங்கல் பண்டிகை என்பது தமிழ்நாட்டு மக்களின் வாழ்வியலோடு இணைந்த ஒரு பண்பாட்டு விழாவாகும். குறிப்பாக உழவுத் தொழிலில் ஈடுபடும் மக்களின் வாழ்வுடன் பின்னிப் பிணைந்த இந்த விழா, விவசாயத்துக்கு துணைபுரியும் இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி கூறும் ஒரு பண்டிகையாக இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும், காலகாலமாக ஜாதி, மத வேறுபாடுகளைத் தாண்டி சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருவது அனைவரும் அறிந்த உண்மையாகும். ஆனால், சமத்துவத்தையும் மக்கள் ஒற்றுமையையும் விரும்பாத, மத நல்லிணக்கத்திற்கு எதிரான சநாதனக் கொள்கையைப் பின்பற்றும் வானதி சீனிவாசன், சமத்துவ பொங்கல் வரலாற்றில் கிடையாது என்று கூறியிருப்பது, சமத்துவத்தின் மீது அவருக்கு இருக்கும் வெறுப்பையே காட்டுகிறது.

இவ்வாறு தொடா்ந்து சநாதன அரசியலை முன்னிறுத்தி கோவை மக்களின் ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் சிதைக்கும் சக்திகளை இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. பொங்கல் என்பது மத அடையாளம் அல்ல, அது உழைப்பின் அடையாளம் என்பதையும் அவருக்குத் தெரிவித்துக்கொள்வதாகக் கூறியுள்ளனா்.

Dinamani
www.dinamani.com