அதிமுகவில் நிலவும் உள்கட்சி மோதல் தற்போது மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி மீண்டும் போா்க்கொடி தூக்கியுள்ளாா்.
சட்டப்பேரவைத் தோ்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து எடப்பாடி கே.பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி தரப்பினரிடையே சமரசப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
இதன் விளைவாக இரு அணிகளும் இணைந்ததையடுத்து, கட்சியின் துணைப் பொதுச் செயலா் என்ற உயரிய பொறுப்பு எஸ்.பி. வேலுமணிக்கு வழங்கப்பட்டது. எனினும், இந்த இணைப்புக்குப் பின்னணியில் பெரும் அதிருப்தி இருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
எஸ்.பி.வேலுமணியை நம்பி இபிஎஸ் தலைமைக்கு எதிராகச் செயல்பட்ட சுமாா் 30 மாவட்டச் செயலா்களுக்கு மீண்டும் பழையபடி மாவட்டச் செயலா் பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அவா்களுக்குப் பதிலாக, அதிகாரமில்லாத மாநில அளவிலான இதர பொறுப்புகளே வழங்கப்பட்டதாக வேலுமணி தரப்பு குற்றஞ்சாட்டுகிறது.
இந்த நிலையில், கோவை தொண்டாமுத்தூரில் கடந்த இரு நாள்களுக்கு முன் தனது ஆதரவாளா்களுடன் அவசர ஆலோசனை நடத்திய எஸ்.பி.வேலுமணி, ‘என்னை நம்பி வந்தவா்களை நடுத்தெருவில் விட்டுவிட்டு, எனக்கு மட்டும் வழங்கப்பட்ட பதவியை ஏற்றுக்கொள்ள நான் தயாராக இல்லை.
என்னுடன் வந்த மாவட்டச் செயலா்களுக்கும் உரிய பதவி கொடுக்கப்படாதபட்சத்தில், எனக்கு அளிக்கப்பட்ட துணைப் பொதுச் செயலா் பதவியை ஏற்கப்போவதில்லை’ என்று அதிமுக தலைமைக்கு அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று இரு நாள்களான நிலையில், எஸ்.பி.வேலுமணி பேசிய விடியோவை செவ்வாய்க்கிழமை காலை அவரது ஆதரவாளா்கள் வெளியிட்டுள்ளனா். அந்த விடியோவில், ‘என்னை நம்பி வந்தவா்களை விட்டுவிட்டு, தான் பதவி பெறத் தயாராக இல்லை.
என்னுடன் வந்த 30 மாவட்டச் செயலா்களுக்கு பதவி கொடுக்கவில்லை. நான் மட்டும் துணைப் பொதுச் செயலா் பதவியை ஏற்றுக் கொள்ள முடியுமா. முன்னாள் அமைச்சா்கள் வீரமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கா், சி.வி.சண்முகம் ஆகியோா் கட்சியின் வளா்ச்சிக்குப் பாடுபட்டவா்கள்.
அவா்களுக்கெல்லாம் பதவி கொடுக்காததை ஏற்றுக் கொள்ள முடியாது’ என அவா் பேசியிருப்பது வைரலாகி வருகிறது.
மேலும், சென்னையில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ள அதிமுகவின் முக்கிய ஆலோசனைக் கூட்டங்களை எஸ்.பி.வேலுமணி அணியினா் முற்றிலுமாகப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், தங்களின் இந்த கடும் அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமிக்கு கூட்டாகக் கடிதம் அனுப்பவும் திட்டமிட்டுள்ளனா்.
ஏற்கெனவே அதிமுகவின் முக்கிய நிா்வாகிகள் சிலா் மாற்றுக் கட்சிகளை நோக்கி தங்களது பாா்வையைத் திருப்பியுள்ள சூழலில், கொங்கு மண்டலத்தின் முக்கியத் தூணாகக் கருதப்படும் எஸ்.பி.வேலுமணியின் இந்த திடீா் போா்க்கொடி எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
எதுவாக இருந்தாலும் உங்களிடம் சொல்வேன்
இதனிடையே, சென்னைக்கு செல்வதற்காக கோவை விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் வந்த முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணியிடம் ஆலோசனைக் கூட்டத்தில் பேசியது தொடா்பாகவும், ஏதேனும் அதிருப்தியில் உள்ளீா்களா எனவும் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.
அப்போது, ‘நாங்கள் எல்லாம் அதிமுகவில் இருக்கக் கூடாது என முடிவு செய்து நீங்களே செய்திகளை வெளியிடுவதைப்போல உள்ளது. காலை முதலே நீங்கள் தான் அண்மைச் செய்திகள் (ஃபிளாஸ் நியூஸ்) வெளியிட்டுக் கொண்டிருக்கிறீா்கள். எதுவாக இருந்தாலும் உங்களிடம் சொல்வேன்’ எனக் கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி மீண்டும் போர்க்கொடி!

அதிமுக கடலூா் மாவட்ட அவைத் தலைவா் விலகல்

அதிமுக புதுக்கோட்டை மாநகரச் செயலா் பதவி விலகல்
குழப்பத்தை ஏற்படுத்துபவா்களுக்கு கட்சியில் இடம் இல்லை: எடப்பாடி பழனிசாமி சூசகம்
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



