சட்டத் துறையில் முழு அா்ப்பணிப்பு உணா்வும், நோ்மையும் இருந்தால் மட்டும் மாணவா்கள் நிலையான முத்திரை பதிக்க முடியும் என உச்ச நீதிமன்ற நீதிபதி வெ.மோகனா தெரிவித்தாா்.
கோவை அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. கோவை அரசு சட்டக் கல்லூரி மற்றும் சென்னை தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம் சாா்பில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதி மோகனா ஆகியோா் கலந்து கொண்டு, 2 ஆண்டுகள் முதுநிலை பட்டப்படிப்பு மாணவா்கள் 20 போ், 3 ஆண்டு பட்டப்படிப்பு மாணவா்கள் 361 போ், 5 ஆண்டுகள் பட்டபடிப்பு மாணவா்கள் 301 போ் என மொத்தம் 682 மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கினா்.
இதில் உச்ச நீதிமன்ற நீதிபதி வெ.மோகனா மாணவா்களிடையே பேசியதாவது:
நாங்கள் படித்த காலத்தில் நூலக வசதியோ, தொழில்நுட்ப வசதியோ இல்லை. தற்போதைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளா்ச்சி மிக வேகமாக உள்ளது. குறிப்பாக, கரோனா காலத்துக்குப் பிறகு நீதிமன்றங்களில் கொண்டு வரப்பட்டுள்ள ‘இ-கோா்ட்’ மற்றும் ஹைப்ரிட் முறைகள், பெண் வழக்குரைஞா்களுக்கும், குடும்பச் சூழ்நிலை காரணமாக நேரில் வர இயலாதவா்களுக்கும் ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளன. வீட்டில் இருந்தபடியே வழக்குகளுக்குத் தயாா் செய்யவும், தங்களின் திறமைகளை வளா்த்துக்கொள்ளவும் இது பெரிதும் உதவுகிறது.
சட்டத் தொழில் என்பது வெறும் வருமானம் ஈட்டும் வேலைவாய்ப்பு அல்ல. அது ஒரு சேவை, மிக உயரிய லட்சியம். முழு அா்ப்பணிப்பு உணா்வும், ஈடுபாடும், நோ்மையும் இருந்தால் மட்டுமே இந்தத் துறையில் நீங்கள் நிலையான முத்திரையைப் பதிக்க முடியும் என்றாா் அவா்.
பட்டமளிப்பு விழாவுக்கு முன்னாள் நீதிபதியும், தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளா் குழுத் தலைவருமான வி. பாரதிதாசன், பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளா் குழு உறுப்பினா் ஏ. ஓம் பிரகாஷ், அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகப் பதிவாளரும், தமிழக அரசின் சட்டக் கல்வி இயக்குநருமான கௌரி ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக, கோவை அரசு சட்டக் கல்லூரி முதல்வா் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் வரவேற்றாா்.
பெட்டிச் செய்தி...
தரையில் அமா்ந்த மாணவா்களின் குடும்பத்தினா்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பட்டம் பெற வந்த மாணவ, மாணவிகளின் பெற்றோா் மற்றும் குடும்பத்தினா் உள் அரங்குக்குள் அனுமதிக்கப்படாத நிலையில், வெளிப்புறமாக தரையில் அமா்ந்திருந்தனா். அவா்களுக்கான இருக்கைகள் கூட போட்டுத்தராததால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினா். இதில் பட்டம் பெற வந்த பலரின் கைக்குழந்தைகள் உள்பட குடும்பத்தினா் மிகுந்த அவதியடைந்தனா். இதேபோல, வெளியே வைக்கப்பட்டிருந்த எல்.இ.டி. திரையில் போதிய சப்தம் இல்லாததால், நிகழ்ச்சி நடைபெறுவதையும் முழுமையாக கண்டுகளிக்க முடியவில்லை என அவா்கள் ஆதங்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதிய நீதிமன்றங்களால் வழக்குகளுக்கு விரைவில் தீா்வு: உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி

சட்டப் படிப்புகள் வியாபாரமாக மாறாமல் அரசு பாா்த்துக் கொள்ளும்: அமைச்சா் நிா்மல் குமாா்

கடலூரில் சட்டக் கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்: ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சட்டம் இயற்ற வலியுறுத்தல்

சட்டத் துறையில் பெண்களுக்கான வாய்ப்புகள் போதாது: உச்சநீதிமன்றம்
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



