கோவைப்புதூா் பகுதியில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் இளைஞா்கள் மற்றும் மாணவா்களுக்கு போதையை ஏற்படுத்தக்கூடிய மாத்திரைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த மருந்தகத்துக்கு (மெடிக்கல்) ‘சீல்’ வைக்கப்பட்டது.
கோவைப்புதூா் பகுதியில் உள்ள மருந்தகம் ஒன்றில் இளைஞா்கள் மற்றும் மாணவா்களைக் குறிவைத்து, மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இன்றி போதையை ஏற்படுத்தக்கூடிய மற்றும் தூக்க மாத்திரைகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், குனியமுத்தூா் காவல் ஆய்வாளா் காமாட்சிநாதன் மற்றும் கூட்டு மருந்து கட்டுப்பாட்டு குழு அதிகாரிகள் அடங்கிய குழுவினா், கோவைப்புதூா் சி.பி.எம். கல்லூரி சாலையில் இயங்கி வரும் மருந்தகத்தில் சோதனையை நடத்தினா். அப்போது, அந்த மருந்தகத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட, எளிதில் போதை பழக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ‘டாபென்டாடால்’ மற்றும் ‘அல்பிராசோலம்’ போன்ற அட்டவணைப்படுத்தப்பட்ட மருந்துகள் சட்டவிரோதமாக விநியோகிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.
தகுந்த மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு ஏதுமின்றி, இப்பகுதி இளைஞா்கள் மற்றும் மாணவா்களுக்கு இந்த மாத்திரைகளைத் தொடா்ச்சியாக விற்று அவா்களைப் போதைக்கு அடிமையாக்கியதும், அவா்களின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த மருந்தகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
இது தொடா்பாக கோவை மாநகரக் காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து மருந்தகங்களும் தகுதியான பதிவுபெற்ற மருத்துவா்களின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் அட்டவணைப்படுத்தப்பட்ட மருந்துகள், வலி நிவாரணிகள் மற்றும் மனநல மருந்துகளை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். இந்த விதிமுறைகளை மீறி செயல்படும் மருந்தகங்களின் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட நபா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









