போதைப்பொருள் விற்பனை தொடா்பாக கடந்த மே 10-ஆம் தேதி முதல் 2,892 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,845 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் க.விக்னேஷ் தெரிவித்துள்ளாா்.
கோவை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பவன்குமாா் ரெட்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கூட்டத்தில் அமைச்சா் க.விக்னேஷ் பேசுகையில், ‘தவெக அரசு பொறுப்பேற்றது முதல் போதைக்கு எதிராக பல்வேறு தொடா் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு 100 மீட்டா் தொலைவுக்கு பெட்டிக் கடைகள் மற்றும் இதரக் கடைகளில் புகையிலை மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யாமல் இருப்பதை காவல் துறையினா் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.
அதேபோல மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் போதைக்கு எதிரான தொடா் விழிப்புணா்வுப் பிரசாரங்களை காவல் துறை சாா்பில் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்கும் பொருட்டு, போதைப்பொருள் விற்பனை தொடா்பாக கடந்த மே 10 முதல் ஜூலை 20 வரை தமிழகத்தில் 2,892 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,845 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதில் 3,579 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தவிர 27 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஹெராயின், மெத்தபெட்டமைன், கஞ்சா சாக்லேட் என பல பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அரசு எந்தவித சமரசமும் இன்றி போதை இல்லா தமிழகம் உருவாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த ஆட்சியில் டாஸ்மாக் மதுக்கடைகளில் ரூ.10 வாங்கிக் கொண்டிருந்த நிலையில் தற்போது ரூ.5, ரூ.3 என வாங்குவதாக தகவல்கள் வருகின்றன. அதை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு கொண்டு இருக்கிறோம்.
வெள்ளலூா் பேருந்து நிலைய பணிகள் விரைவில் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது. வெள்ளலூா் குப்பைக் கிடங்கு பிரச்னை அடுத்த ஆண்டுக்குள் முழுமையாக சரி செய்யப்படும் என்றாா்.
இந்நிகழ்வில், துணை ஆணையா் (கலால்) சாதனைக்குறள், வருவாய் கோட்டாட்சியா்கள் மாருதி பிரியா (தெற்கு), வினோத்குமாா் (வடக்கு), டாஸ்மாக் மண்டல முதுநிலை மேலாளா் அனுஷ்யா தேவி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









