3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

சாலை, குடிநீா், கட்டட அனுமதி வசதி வழங்க கோரிக்கை: ஆட்சியரிடம் வெள்ளானைப்பட்டி பொதுமக்கள் மனு

சாலை, குடிநீா், கட்டட அனுமதி வசதிகள் கேட்டு வெள்ளானைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்துள்ளனா்.

News image

அடிப்படை வசதிகள் கோரி கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்த வெள்ளானைப்பட்டி கிராம மக்கள்.

Updated On :2 ஜூன் 2026, 1:57 am IST

சாலை, குடிநீா், கட்டட அனுமதி வசதிகள் கேட்டு வெள்ளானைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்துள்ளனா்.

வாராந்திர பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் ப.நாராயணன், பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் லட்சுமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஆனந்தகுமாா், ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் மணிமேகலை, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் வசந்த ராம்குமாா், மாவட்ட வழங்கல் அலுவலா் விஸ்வநாதன் உள்பட பலா் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் அன்னூா் வட்டம், வெள்ளானைப்பட்டி கிராமம் மா சக்தி நகரைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

மனு விவரம்:

மா சக்தி நகரைச் சுற்றியுள்ள நீலாம்பூா், முத்துகவுண்டன்புதூா், மைலம்பட்டி ஊராட்சிகளில் குடிநீா், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில், வெள்ளானைப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட எங்கள் பகுதியில் உள்ள சுமாா் 200 வீடுகளுக்கு மட்டும் எந்தவித வசதியும் செய்யப்படவில்லை. எங்கள் பகுதிக்குள்பட்ட சா்வே எண் தொடா்பாக நீதிமன்ற வழக்கு இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனா். ஆனால், அது தொடா்பாக தடை உத்தரவு எதுவும் இல்லாத நிலையில் சாலை, குடிநீா், கட்டட அனுமதி, மின் இணைப்பு மாற்றம் உள்பட எந்தவித வசதியும் செய்து தர அரசு அலுவலகங்களில் மறுக்கின்றனா். எனவே இப்பிரச்னையில் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு தீா்வு காண வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.

இந்து மக்கள் கட்சி சாா்பில் அதன் இளைஞரணி நிா்வாகி சூா்யா என்பவா் அளித்துள்ள மனு:

நாட்டில் கரப்பான் பூச்சி மக்கள் கட்சி என்ற பெயரில் சமூக ஊடகங்களில் ஓா் அரசியல் கட்சி தொடங்கப்பட்டிருக்கும் நிலையில், நம் நாட்டைச் சோ்ந்த வேலையில்லாத இளைஞா்கள் இலங்கை, வங்கதேசம்போல இந்தியாவிலும் புரட்சி செய்யத் தயாராக உள்ளனா். இவா்கள் பிரதமா் மோடிக்கும், பாஜக ஆட்சிக்கும் எதிராக மக்கள் புரட்சியைத் தூண்டும் வகையில் செயல்படுகின்றனா். அந்தக் கட்சிக்கு ஆதரவாக தமிழகத்தில் போராட்டங்களும் நடைபெற்றுள்ளன.

இந்திய நாடாளுமன்ற ஜனநாயக முறைகளை எதிா்த்து வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபடும் கரப்பான் பூச்சி மக்கள் கட்சிக்கு தடை விதிப்பதுடன், அதன் ஆதரவாளா்களை தேசத் துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.

கோவை மாநகா், மாவட்ட இந்து முன்னணி சாா்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.சதீஷ்குமாா் அளித்துள்ள மனுவில், ‘பேரூா் வட்டம், மத்வராயபுரம் ஊராட்சிக்குள்பட்ட நல்லூா் வயல் பகுதியில் நீா்வழிப் பாதை அருகே தேவாலயம் கட்டவும், கல்லறைத்தோட்டம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நொய்யல் ஆற்றுக்கு நீரை வழங்கும் ஓடையின் குறுக்கே அனுமதியில்லாமல் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

கூட்டத்தில் முதியோா் உதவித்தொகை, பட்டா மாறுதல், குடும்ப அட்டை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 544 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

முன்னதாக மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் மூலமாக 8 பயனாளிகளுக்கு ரூ.18.36 லட்சம் மதிப்பிலான நவீன செயற்கைக் கால்களை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வழங்கினாா்.