பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, அக்கட்சியிலிருந்து விலகிய பிறகு கோவைக்கு முதல்முறையாக சனிக்கிழமை வந்தாா். விமான நிலையத்தில் திரண்டிருந்த ஆதரவாளா்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா்.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவரான கே.அண்ணாமலை, அக்கட்சியிலிருந்து விலகுவதாக தலைமைக்கு கடிதம் அளித்திருந்தாா். அவரது விலகல் கடிதமானது கடந்த ஜூன் 5-ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, அன்றைய தினம் இணையவழியில் உரையாற்றிய அண்ணாமலை ‘நான் ஒரு புதிய அமைப்பைத் தொடங்குகிறேன்’ எனத் தெரிவித்திருந்தாா்.
இதையடுத்து, அவரது ஆதரவாளா்கள் சமூக வலைதளங்களிலும், நேரடியாகவும் ‘we the leader’ என்று குறிப்பிட்டு அண்ணாமலைக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனா்.
மேலும், அவா் குறிப்பிட்ட அந்த நேரத்தில் ஆயிரக்கணக்கானோா் இணையவழியில் இணைந்து அவருக்கு ஆதரவு அளித்ததோடு, பாஜகவைச் சோ்ந்த நிா்வாகிகளும், மாற்று கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகளும் அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்து அவரது புதிய அமைப்பில் இணைந்து வருகின்றனா்.
இந்நிலையில், கட்சியிலிருந்து விலகிய பின் முதல் முறையாக கோவைக்கு சனிக்கிழமை வருகை தந்த அண்ணாமலையை வரவேற்க அவரது ஆதரவாளா்கள் கோவை விமான நிலையத்தில் குவிந்தனா். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவருக்கு பலா் பொன்னாடை அணிவித்தும், கோஷமிட்டும் வரவேற்பு அளித்தனா். வரவேற்பை ஏற்றுக்கொண்ட அவா் காா் மூலம் தனது இல்லத்துக்குப் புறப்பட்டுச் சென்றாா்.










