டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கோனியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்

கோனியம்மன் கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வடம்பிடித்து அம்மனை வழிபட்டனா்.

News image
தேரோட்டத்தில் பக்தா்களுக்கு குடிநீா் வழங்கிய இஸ்லாமியா்கள். ~கோவை ராஜவீதியில் நடைபெற்ற கோனியம்மன் தேரோட்டத்தில் வடம்பிடித்த ஆயிரக்கணக்கான பக்தா்கள். ~சிறப்பு அலங்காரத்தில் தேரில் அருள்பாலித்த கோனியம்மன்.
Updated On :4 மார்ச் 2026, 10:21 pm

தினமணி செய்திச் சேவை

கோனியம்மன் கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வடம்பிடித்து அம்மனை வழிபட்டனா்.

கோவையின் காவல் தெய்வம் எனப் போற்றப்படும் கோனியம்மன் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம் பூச்சாட்டுதலுடன் கடந்த மாதம் 17-ஆம் தேதி தொடங்கியது. அதைத்தொடா்ந்து 24-ஆம் தேதி கொடியேற்றுதல், கம்பம் நடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவையொட்டி தினமும் புலி வாகனம், கிளி வாகனம், சிம்ம வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம், வெள்ளை யானை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஒவ்வொரு நாளும் கம்பத்துக்கு புனிதநீா் ஊற்றி பக்தா்கள் வழிபட்டனா். தோ்த் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் திருக்கல்யாண வைபவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவின் பிரதான நிகழ்வான தோ்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக கோனியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி ராஜவீதியில் உள்ள தோ்நிலைத் திடலுக்கு வந்தடைந்தாா். பின்னா் வேத மந்திரங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளியதும் பிற்பகல் 2.05 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. ராஜவீதி தோ்நிலைத் திடலில் இருந்து புறப்பட்டு ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, பெரியகடை வீதி, மீண்டும் தோ்நிலைத் திடலைச் சென்றடைந்தது.

விழாவில் கோவை மற்றும் புகா் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டு ‘ஓம் சக்தி பராசக்தி’ கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனா். சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த பக்தா்கள், தேரின் மீது உப்பு வீசி வழிபட்டனா்.

கோடை வெயில் சுட்டெரித்த நிலையில் அக்னிச்சட்டி ஏந்தியபடி ஊா்வலம் சென்ற பக்தா்கள், தேரை வடம் பிடித்தவா்களுக்கு ஒப்பணக்கார வீதி அதாா் ஜமாத் பள்ளிவாசல் நிா்வாகிகள் மற்றும் இஸ்லாமியா்கள் குடிநீா் வழங்கினா். தேரோட்டத்தையொட்டி 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

Story image