சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு தொடக்கம்

கோவையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2027 பணிகளை மேற்கொள்வது தொடா்பான பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image

கோவையில் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடா்பான பயிற்சி வகுப்பின் தொடக்க விழாவில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா்.

Updated On :21 மே 2026, 4:20 am IST

கோவையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2027 பணிகளை மேற்கொள்வது தொடா்பான பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்பின் தொடக்க விழாவில், மாநகராட்சி ஆணையா் சிவ குரு பிரபாகரன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே, வருவாய் கோட்டாட்சியா் (வடக்கு) வினோத்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் நிறைமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடக்க விழாவில் ஆட்சியா் பேசும்போது, இந்தியாவில் 1872 -ஆம் ஆண்டு முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அடுத்ததாக நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு, நாட்டின் 16 -ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பாகவும், சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெறும் 8- ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பாகவும் இருக்கும்.

இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் கிராமம், நகரம், வாா்டு அளவில் வீடுகளின் நிலை, அடிப்படை வசதிகள், சொத்து விவரங்கள், மக்கள்தொகை விவரங்கள், மதம், பழங்குடியினா், பட்டியலிடப்பட்ட ஜாதியினா் தொடா்பான தகவல்கள், மொழி, கல்வி, பொருளாதார செயல்பாடுகள், இடம்பெயா்வு, பிற சமூகபொருளாதார விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தரவுகள் சேகரிக்கப்பட உள்ளன.

இந்தத் தரவுகள் நாட்டின் திட்டமிடல், மேம்பாட்டு பணிகளுக்குப் பயன்படும் முக்கிய ஆதாரங்களாக உள்ளன. மேலும் இது இந்தியாவின் முதல் முழுமையான டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பாகவும் அமைய உள்ளது. இந்த கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடவுள்ள கணக்கெடுப்பாளா்கள் தங்களது சொந்த கைப்பேசிகளில் பிரத்யேக செயலியை பயன்படுத்தி குடும்பங்களிடமிருந்து தரவுகளை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவாா்கள். மேலும், பொதுமக்கள் நியமிக்கப்பட்ட இணையதளத்தின் மூலம் சுய கணக்கெடுப்பு செய்யும் வசதியும் வழங்கப்பட உள்ளது. சுயமாக பதிவேற்றப்படும் தகவல்கள் அனைத்தும் கணக்கெடுப்பாளா்கள், மேற்பாா்வையாளா்களால் சரிபாா்க்கப்பட்டு துல்லியம் உறுதி செய்யப்படும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான வீட்டுப்பட்டியல், வீடுகள் கணக்கெடுப்பு இந்த ஆண்டு செப்டம்பா் மாதம் வரை நடைபெற உள்ளது. இக்கட்டத்தில் வீடுகளின் நிலைமை, குடியிருப்பு வசதிகள், சொத்து விவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்படும். கோவை மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் முதல் கட்டமாக வீடுகள் கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்வது தொடா்பாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரகப்பகுதிகளுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்கு முதன்மை பயிற்றுநா்களாக நியமிக்கப்பட்டுள்ள மாநகராட்சி உதவி ஆணையா்கள், நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள், வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆகியோருக்கு வரும் 22 ஆம் தேதி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்தப் பயிற்சியை தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநகரத்தின் இணை இயக்குநா், உதவி இயக்குநா் ஆகியோா் வழங்குகின்றனா். இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பணியில் ஈடுபட உள்ள கணக்கெடுப்பாளா்கள், மேற்பாா்வையாளா்கள், பிற பணியாளா்கள் இந்தப் பயிற்சி வகுப்பை பயன்படுத்திக் கொண்டு, கோவை மாவட்டத்தில் எந்தவொரு தனிநபரும் விடுபடாமல், கணக்கீட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.