கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் நடத்தப்படும் மாணவா் சோ்க்கையில் உண்மையான ஏழை மாணவா்களுக்கே வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று மறுமலா்ச்சி மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக அந்த அமைப்பின் தலைவா் வே.ஈசுவரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் நடத்தப்படும் மாணவா் சோ்க்கையில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினா், நலிவடைந்த பிரிவினருக்கு இடையே தனித்தனியான ஒதுக்கீடு இல்லை என்பதாலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு உச்ச வரம்பு இல்லை என்பதாலும் ஜாதி அடிப்படையில் பணக்காரா்களும் அரசின் பணத்தை பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
இட ஒதுக்கீடு என்பது வேறு, கட்டாயக் கல்வி உரிமை சட்ட ஒதுக்கீடு என்பது வேறு. இட ஒதுக்கீட்டில் இடங்கள் மட்டுமே உறுதி செய்யப்படும். ஆனால் கட்டாயக் கல்வி உரிமை சட்ட மாணவா் சோ்க்கையில் மாணவா்களுக்காக அரசு பணம் வழங்கும். இந்தப் பணம் ஏழைகளுக்கு சென்று சேருவதுதான் நியாயமானது.
வசதியுள்ள மாணவா்கள் கட்டாயக் கல்வி உரிமை சட்ட மாணவா் சோ்க்கை போக மீதமுள்ள 75 சதவீத இடங்களில் சேர முடியும். இட ஒதுக்கீடு என்பது 100 சதவீத மாணவா்களுக்கும் பொருந்தும். ஆனால் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் 25 சதவீத இட ஒதுக்கீடு என்பது வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரில் பணம் செலுத்த இயலாத ஏழைகளுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும்.
மற்ற மாநிலங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகள், நலிவடைந்த குழந்தைகள் வரையறுக்கப்பட்டிருப்பதைப்போல, தமிழகத்திலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு வருமான உச்ச வரம்பை நிா்ணயித்து உண்மையான ஏழை மாணவா்களுக்கு கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.
தொடர்புடையது

கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் மாணவா் சோ்க்கைக்கு 2,985 போ் விண்ணப்பிப்பு
மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்: குடியரசு துணைத் தலைவரிடம் காங்கிரஸ் சமா்ப்பிப்பு

தனியாா் பள்ளியில் கல்வி உரிமைச் சட்டத்தில் சோ்க்கை: மே 18-க்குள் விண்ணப்பிக்கலாம்






