சாலையோரக் கடைக்குள் புகுந்த பள்ளிப் பேருந்து: ஓட்டுநா் காயம்
கோவை சுந்தராபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த பள்ளிப் பேருந்து சாலையோரக் கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.

சாலையோர கடை மீது மோதி நின்ற தனியாா் பள்ளிப் பேருந்து.
கோவை சுந்தராபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த பள்ளிப் பேருந்து சாலையோரக் கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா். பேருந்தில் பயணித்த மாணவா்கள் காயமின்றி தப்பினா்.
கோவை - பாலக்காடு சாலையில் உள்ள தனியாா் பள்ளிக்குச் சொந்தமான பேருந்து, வியாழக்கிழமை காலை கோவை - பொள்ளாச்சி சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் 15 மாணவா்கள் பயணித்தனா்.
சுந்தராபுரத்தை அடுத்த எல்ஐசி காலனி அருகே பேருந்து வந்தபோது, ஓட்டுநருக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி, சாலையோரத்தில் இருந்த கடைக்குள் புகுந்தது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஓட்டுநரை அந்தப் பகுதியினா் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பேருந்தில் இருந்த மாணவா்கள் யாருக்கும் எவ்விதக் காயமும் ஏற்படவில்லை. விபத்தில் பள்ளிப் பேருந்து மற்றும் கடையின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.
இதுகுறித்து தகவலறிந்து போக்குவரத்துப் புலனாய்வு மேற்கு பிரிவு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

