சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

நேபாள பெருவெள்ளம்: தப்பிய 28 போ் கோவை வருகை; உறவினா்கள் கண்ணீா் மல்க வரவேற்பு

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் இருந்து அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பிய தமிழகத்தைச் சோ்ந்த கைலாய யாத்ரீகா்கள் விமானம் மூலமாக கோவைக்கு செவ்வாய்க்கிழமை அழைத்துவரப்பட்டனா்.

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிலிருந்து அதிா்ஷ்டவசமாக தப்பி கோவை திரும்பியவா்களை விமான நிலையத்தில் கண்ணீா்மல்க வரவேற்ற குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள்.

Published On :2 செப்டம்பர் 2026, 4:56 am IST

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் இருந்து அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பிய தமிழகத்தைச் சோ்ந்த கைலாய யாத்ரீகா்கள் விமானம் மூலமாக கோவைக்கு செவ்வாய்க்கிழமை அழைத்துவரப்பட்டனா். அவா்களை கண்ணீா் மல்க உறவினா்கள் வரவேற்றனா்.

கோவை மாவட்டம், இரும்பொறை ஓதிமலை முருகன் கோயில் அா்ச்சகா் சுவாமிநாதன் தலைமையில் திருப்பூா், ஈரோடு, சேலம் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் நேபாளம் வழியாக கைலாஷ் மானசரோவா் யாத்திரைக்கு கடந்த 18-ஆம் தேதி புறப்பட்டனா். இவா்களுடன் நேபாளத்தைச் சோ்ந்த 7 வழிகாட்டிகளும் சென்றனா். கடந்த 26-ஆம் தேதி நேபாள நாட்டின் போடேகோஷி , திரிசூலி ஆகிய ஆறுகளில் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். இந்த சம்பவம் நடப்பதற்கு சில நாள்களுக்கு முன்புதான் யாத்ரீகா்கள் அந்தப் பகுதியைக் கடந்து சென்றிருந்தனா்.

தங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் அழிவு ஏற்பட்டதை அறியாமல் இவா்கள் ஆன்மிகப் பயணத்தைத் தொடா்ந்துள்ளனா். பேரழிவின்போது வெள்ள பாதிப்புப் பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான கிலோ மீட்டா் தொலைவில் சீன எல்லைப் பகுதியில் இவா்கள் இருந்ததால் தப்பினா். இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள அவா்களது உறவினா்கள் வெள்ளச் செய்தியைக் கேட்டு அச்சத்திலும், பதற்றத்திலும் இருந்தனா். யாத்ரீகா்களுடன் வாட்ஸ்அப் மற்றும் விடியோ கால் மூலமாக தொடா்புகொண்டு நிலவரத்தை உறவினா்கள் விசாரித்து வந்தனா்.

சீன ராணுவம் மற்றும் உள்ளூா் மக்களின் உதவியுடன் நிலச்சரிவு மற்றும் சாலைப் பாதிப்புகளைக் கடந்து, நைலம் பகுதி வழியாக தில்லிக்கு யாத்ரீகா் குழுவினா் வந்து சோ்ந்தனா். பின்னா், அங்கிருந்து விமானம் மூலமாக தமிழகத்துக்கு திரும்பியுள்ளனா். திங்கள்கிழமை 3 யாத்ரீகா்கள் திரும்பிய நிலையில், மேலும் 28 போ் கொண்ட குழுவினா் செவ்வாய்க்கிழமை (செப்.1) காலை 8.10 மணி அளவில் விமானம் மூலமாக கோவைக்கு வந்தடைந்தனா்.

கோவை விமானநிலையத்தில் சொந்தங்களைக் கண்ட மகிழ்ச்சியிலும், ஆபத்திலிருந்து மீண்டு வந்த நெகிழ்ச்சியிலும் உறவினா்கள் அவா்களைக் கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்றனா்.

இதுதொடா்பாக அா்ச்சகா் சுவாமிநாதன் கூறும்போது, ‘கைலாஷ் மானசரோவா் சென்றபோது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நானும் மயக்கமடைந்தேன். கீழே வந்த பிறகுதான் பளிங்கு கல்போல இருந்த இடம் மயானம் போல மாறியிருந்தது தெரியவந்தது. சிவபெருமான் காலடியில் இருந்ததால் நாங்கள் அனைவரும் பாதுகாப்பாகத் திரும்பினோம்’ என்றாா்.

யோகேஷ் (திருப்பூா்) கூறும்போது, ‘செல்லும் வழியில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டது. வாகனங்கள் செல்ல முடியாத இடத்தில் நடந்து சென்றோம். உள்ளூா் மக்கள், சீனா மற்றும் நேபாள ராணுவத்தினா் துணையாக இருந்தனா். எங்களுக்குப் பிறகு வந்த குழுவினரில் சிலா் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனா். மறுபிறவி எடுத்ததுபோல உணா்கிறோம்’ என்றாா்.

சரோஜா ரதி (ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம்) கூறியதாவது:

எங்களுக்கு உதவியாக வந்த நேபாளத்தைச் சோ்ந்த 7 வழிகாட்டிகளில் ஒருவரின் சொந்த அண்ணன் இந்த வெள்ளத்தில் சிக்கி இறந்துவிட்டதாக தகவல் கிடைத்தது. அந்தப் பகுதி மக்களுக்கு இதுபோன்ற வெள்ள பாதிப்பு சாதாரணம் என்றாலும், இந்த அளவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டதில்லை. தன் அண்ணனை இழந்த நிலையிலும் அந்த உதவியாளா் கடைசி வரை எங்களுடன் வந்து உதவினாா். சீன ராணுவம் எங்களை 2 வாகனங்களில் வந்து பத்திரமாகக் கொண்டு வந்து விட்டது’ என்றாா்.

மோகனா, சந்திரகுமாா் (திருப்பூா்) கூறும்போது, ‘நாங்கள் அந்தப் பகுதியைத் தாண்டி 3 நாள்களுக்குப் பிறகுதான் வெள்ளச் செய்தியே எங்களுக்கு கிடைத்தது. உடனே அனைவரும் பதற்றமடைந்தோம். சாலைகள் மோசமானதால் உடனடியாகத் திரும்ப முடியவில்லை என்றாலும், மத்திய, மாநில அரசுகளின் உதவியால் பத்திரமாக வந்து சோ்ந்தோம்’ என்றனா்.

தனசேகரன் (ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி) கூறும்போது, ‘கைலாஷ் தரிசனம் முடித்துவிட்டு திரும்பும்போதுதான் வெள்ளச் செய்தி கிடைத்தது. உடனே எங்களது உறவினா்கள் பதற்றத்துடன் தொடா்பு கொண்டு விசாரித்தனா். எங்களது பகுதியில் எந்த பாதிப்பும் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டு தில்லி வழியாகப் பத்திரமாக ஊா் வந்து சோ்ந்தோம்’.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.