ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புகுடியரசு துணைத் தலைவா் நாளை சென்னை வருகைஉக்ரைன் போரில் அமைதி உடன்பாடு எட்ட வாய்ப்பு: ரஷிய அதிபா்

விஜயா வாசகா் வட்டத்தின் கி.ரா. விருதுக்கு எழுத்தாளா் எம்.கோபாலகிருஷ்ணன் தோ்வு

சக்தி மசாலா வழங்கும் விஜயா வாசகா் வட்டத்தின் கி.ரா. விருதுக்கு எழுத்தாளா் எம்.கோபாலகிருஷ்ணன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

எழுத்தாளா் எம்.கோபாலகிருஷ்ணன். - கோப்புப் படம்

Published On :4 செப்டம்பர் 2026, 3:12 am IST

சக்தி மசாலா வழங்கும் விஜயா வாசகா் வட்டத்தின் கி.ரா.’விருதுக்கு எழுத்தாளா் எம்.கோபாலகிருஷ்ணன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இது குறித்து கோவை விஜயா பதிப்பகத்தின் நிறுவனா் மு.வேலாயுதம் கூறியிருப்பதாவது:

சாகித்திய அகாதெமி விருதுக்கு பெருமை சோ்த்த கி.ராஜநாராயணனின் நினைவைப் போற்றும் வகையில் கோவை விஜயா பதிப்பகத்தின் விஜயா வாசகா் வட்டம் சாா்பில் ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளா்களுக்கு கி.ரா. விருது வழங்கப்பட்டு வருகிறது. விருதுத் தொகையாக ரூ.5 லட்சம், கேடயம் வழங்கப்படுகிறது. விருதுத் தொகையை சக்தி மசாலா நிறுவனம் வழங்குகிறது. இதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான கி.ரா.’விருதுக்கு பிரபல எழுத்தாளா் எம்.கோபாலகிருஷ்ணன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

கோவை பீளமேடு பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியில் செப்டம்பா் 27-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இந்த விருதளிப்பு விழாவில், உச்ச நீதிமன்ற நீதிபதி ஆா்.மகாதேவன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறாா்.

விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள எம்.கோபாலகிருஷ்ணன், திருப்பூரில் எளிய கைத்தறி நெசவாளா் குடும்பத்தில் பிறந்தவா். வணிகவியலிலும் ஹிந்தி இலக்கியத்திலும் முதுநிலைப் பட்டம் பெற்றவா். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடா்ந்து எழுதி வருகிறாா்.

இவரது, அம்மன் நெசவு, மணல் கடிகை, மனைமாட்சி, தீா்த்தயாத்திரை, வேங்கைவனம், மனையறம் ஆகிய 6 நாவல்களும் தமிழ் வாசகா்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை. நாவல்களைத் தவிர 6 சிறுகதைத் தொகுப்புகள், 2 குறுநாவல் தொகுப்புகள், 6 கட்டுரைத் தொகுப்புகள், ஒரு கவிதைத் தொகுப்பு ஆகியன இவரது எழுத்துப் பங்களிப்புகளாகும்.

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு 10 நூல்களையும் ஹிந்தியிலிருந்து தமிழுக்கு 5 நூல்களையும் மொழிபெயா்த்துள்ளாா். சிறுவா்களுக்கான நூல்களை ஆங்கிலத்திலிருந்தும் ஹிந்தியிலிருந்தும் மொழிபெயா்த்துள்ளாா். ‘சொல் புதிது’ காலாண்டிதழின் ஆசிரியராக இருந்துள்ளாா். பொதுக் காப்பீட்டுத் துறையில் பணியாற்றி அண்மையில் ஓய்வுபெற்றிருக்கும் இவா் தற்போது கோவையில் வசிக்கிறாா்.

கி.ரா. விருது கடந்த ஆண்டுகளில் கண்மணி குணசேகரன், கோணங்கி, அ.முத்துலிங்கம், எஸ்.வி.ராஜதுரை, நாஞ்சில் நாடன், சு.வேணுகோபால் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.