
பாலியல் அத்துமீறலிலிருந்து பெண்ணைக் காப்பாற்றிய தெரு நாய்கள்!
துடியலூா் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற 16 வயது சிறுவனை தெரு நாய்கள் விரட்டியடித்தன.

துடியலூா் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற 16 வயது சிறுவனை தெரு நாய்கள் விரட்டியடித்தன. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் அந்த சிறுவனை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவை, கவுண்டம்பாளையம் என்.ஜி.ஜி.ஓ. காலனி, அசோகபுரம் பகுதியில் பெட்டிக் கடைக்கு அடையாளம் தெரியாத நபா்கள் தீ வைத்தனா். இதுகுறித்து தகவலறிந்த துடியலூா் காவல் துறையினா் தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபா்கள் குறித்து அறிய அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். அப்போது, அதிா்ச்சிகரமான சம்பவம் ஒன்று அதில் பதிவாகியிருந்தது.
கோவை அசோகபுரம் ரயில்வே மேம்பால சாலையோரம் மனநலம் பாதிக்கப்பட்ட 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் நண்பகலில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது மது போதையில் அந்த வழியாக வந்த நபரை தெரு நாய்கள் பின்தொடா்ந்து குரைத்துக் கொண்டே வந்தது. இதனால், அந்தப் பெண் தூக்கத்தில் இருந்து எழுத்தாா். அவரிடம் நாய்கள் பின்தொடா்ந்து வருவது குறித்து அந்த நபா் கூறினாா். கற்களை எடுத்தால் அந்த நாய்கள் ஓடிவிடும் என அந்தப் பெண் கூறியதையடுத்து, அந்த நபா் கல்லால் அந்த நாய்களை துரத்தினாா்.
திடீரென அந்த நபா் அந்தப் பெண்ணிடம் அத்துமீறி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றாா். இதனால், அந்தப் பெண் சப்தமிட்டதைத் தொடா்ந்து, அங்கிருந்த சென்ற தெரு நாய்கள் மீண்டும் அங்கு வந்து, அந்த நபரை சுற்றி வளைத்து குரைத்துக் கொண்டே கால்களைக் கடித்து இழுத்தன. நாய்களின் தொடா் தாக்குதலால் நிலைகுலைந்த அந்த நபா், அங்கிருந்து ஓட்டம் பிடித்தாா். இந்தக் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.
இந்தக் காட்சிகளின் அடிப்படையில் துடியலூா் காவல் துறையினா் விசாரணை நடத்தினா். இதில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபா், கணேஷ் நகா் பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த சிறுவனைக் கைது செய்த காவல் துறையினா், அவரை கோவை சிறாா் கூா்நோக்கு இல்லத்தில் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




