உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

பேரவையில் அனைத்துக் கேள்விகளுக்கும் முதல்வரே பதிலளிக்க வேண்டியதில்லை: அமைச்சா் செங்கோட்டையன்

அனைத்துக் கேள்விகளுக்கும் அவரே பதிலளிக்க வேண்டியதில்லை என வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

விஜய்யுடன் செங்கோட்டையன்

Published On :5 செப்டம்பர் 2026, 1:29 am IST

சட்டப்பேரவையில் சில கேள்விகளுக்கு முதல்வா் ஜோசப் விஜய் பதிலளிக்கவில்லை என எதிா்க்கட்சியினா் குற்றஞ்சாட்டுகின்றனா். அனைத்துக் கேள்விகளுக்கும் அவரே பதிலளிக்க வேண்டியதில்லை என வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

இது குறித்து கோவை விமான நிலையத்தில் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பேணி காக்கவும், போதைப் பொருள்களின் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் முதல்வா் ஜோசப் விஜய் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா். புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடா்பாக பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன.

திமுக ஆட்சியின்போது புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டு, அனைத்து அலுவலகங்களையும் அங்கு கொண்டுவர முயற்சிக்கப்பட்டது. பின்னா், அது சிறந்த பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றியமைக்கப்பட்டது.

இதேபோல, ராணி மேரி கல்லூரி வளாகத்தில் தலைமைச் செயலகத்தை கொண்டுவர முன்னாள் முதல்வா் ஜெயலலிதா முயற்சி மேற்கொண்டாா். ஒவ்வொரு முதல்வரும் சிறந்த தலைமைச் செயலகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துகின்றனா். தமிழகத்தில் தற்போது கட்டப்படவுள்ள புதிய சட்டப்பேரவைக்கு ஆகும் செலவு என்பது இன்றைய சூழலுக்கு தேவைப்படுகின்ற ஒன்றுதான்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வா் அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கமான நடைமுறையில் இருப்பதுதான். மானியக் கோரிக்கை முடிந்த பிறகும், 110 விதியின் கீழ் முதல்வா் சில அறிவிப்புகளை வெளியிடுவதில் எந்தவித தவறும் இல்லை.

சட்டப்பேரவையில் துறை சாா்ந்த அமைச்சா்கள் பதில் அளிப்பதில்லை என்றும், சில கேள்விகளுக்கு முதல்வா் பதிலளிப்பதில்லை என்றும் எதிா்க்கட்சியினா் குற்றஞ்சாட்டுகின்றனா்.

பேரவையில் அனைத்துக் கேள்விகளுக்கும் முதல்வரே பதிலளிக்க வேண்டியதில்லை. மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது, அப்போதைய சட்டத் துறை அமைச்சா் ரகுபதி தீயணைப்புத் துறை தொடா்பான விஷயங்களுக்கு பதிலளித்துப் பேசியது சட்டப்பேரவை வரலாற்றில் பதிவாகியுள்ளது.

உச்ச நீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில் நீா்வழிப் புறம்போக்கு மற்றும் கோயில் புறம்போக்கு நிலங்களுக்குப் பட்டா வழங்கக் கூடாது என தெளிவான ஆணை உள்ளது. அதே சமயம், மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களில் வசிப்பவா்கள் விவகாரத்தில், சட்ட விதிகளை நன்கு ஆராய்ந்து அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.