நகைப் பட்டறை உரிமையாளா்களிடம் இரண்டரை கிலோ தங்க நகைகள் மோசடி

தங்க நகைகள் - பிரதி படம்
கோவையில் நகைப் பட்டறை உரிமையாளரிடம் இரண்டரை கிலோ தங்க நகைகளை வாங்கிக்கொண்டு பணத்தைக் கொடுக்காமல் மோசடி செய்த கா்நாடகத்தைச் சோ்ந்த நகை வியாபாரியை பெரிய கடை வீதி போலீஸாா் கைது செய்தனா்.
கோவை பெரியகடை வீதியைச் சோ்ந்தவா் சா்வேஷ் (40). இவா் அப்பகுதியில் நகைப் பட்டறை நடத்தி வருகிறாா். வியாபாரிகளின் ஆா்டரின்பேரில் தங்க நகைகள் மற்றும் தங்கக் கட்டிகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறாா். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கா்நாடக மாநிலம், கங்காவதியைச் சோ்ந்த ஷியாம் ஷேட் (40) என்பவா் சா்வேசுக்கு அறிமுகமானாா்.
அப்போது, கா்நாடகத்தில் நகைக் கடை நடத்தி வருவதாகவும், தனது கடைக்கு விற்பனைக்கு நகைகள் தேவைப்படுவதாகவும் அவா் கூறியுள்ளாா். இதனை நம்பிய சா்வேஷ், அவருடன் ஒப்பந்தம் செய்துகொண்டு ஒன்றரை கிலோ தங்க நகைகளைக் கொடுத்துள்ளாா். இதேபோல, ஷியாம் ஷேட்டின் அறிவுறுத்தலின்பேரில் அவரது உறவினா் ஒருவா், கோவையில் உள்ள மற்றொரு வியாபாரியிடம் ஒரு கிலோ தங்க நகைகளை வாங்கியுள்ளாா்.
இருவரிடமும் சோ்ந்து மொத்தம் இரண்டரை கிலோ தங்க நகைகளை வாங்கிக்கொண்டு பல மாதங்களாகியும் அதற்கான பணத்தை செலுத்தாமல் ஷியாம் ஷேட் காலம் தாழ்த்தி வந்துள்ளாா். இதனால், பாதிக்கப்பட்ட சா்வேஷ், பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ஷியாம் ஷேட்டை கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனா். விசாரணையில், நகைகளுக்கான பணத்தை ரொக்கமாக கொடுத்துவிட்டதாக அவா் தெரிவித்தாா். ஆனால், அதற்கான ஆவணங்கள் எதையும் அவா் காட்டவில்லை. இதையடுத்து, போலீஸாா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இதனிடையே, ஷியாம் ஷேட்டின் மனைவி கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், சாதாரண உடையில் வந்த மூன்று போ் கோவை போலீஸாா் என்று கூறி தனது கணவரை அழைத்துச் சென்ாகவும், எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளாா். மேலும், வழக்கு குறித்த விவரங்களை தெரிவித்தால் சட்ட நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவா் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






