
விபத்தில் காயமடைந்தவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
ஈரோடு, வயிராபாளையம் ராஜகணபதி நகரைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (50). தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 1.2.2005-இல் ஈரோடு பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சேலம் போக்குவரத்து கோட்டத்தை சேர்ந்த பேருந்து இவர் மீது மோதியது. இந்த விபத்தில் வெங்கடாசலத்துக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த விபத்து தொடர்பாக ஈரோடு நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், விபத்துக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடு கோரி ஈரோடு தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வெங்கடாசலம் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வெங்கடாசலத்துக்கு ரூ. 82 ஆயிரம் இழப்பீடு வழங்க கடந்த 2006-ஆம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது. ஆனால், சேலம் போக்குவரத்து கோட்டத்தினர் இந்த இழப்பீட்டை வழங்கவில்லை.
இந்நிலையில், தனக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெங்கடாசலம் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கூடுதலாக ரூ. 25 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. சேலம் போக்குவரத்து கோட்டத்தினர் இழப்பீடு வழங்காத நிலையில், ஈரோடு நீதிமன்றத்தில் வெங்கடாசலம் சார்பில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த தலைமை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி மலர் வாலண்டினா, சேலம் போக்குவரத்து கோட்டத்தைச் சேர்ந்த பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, ஈரோடு பேருந்து நிலையத்தில் சேலம் கோட்டப் பேருந்தினை நீதிமன்ற கட்டளைப் பணியாளர்கள் ஜப்தி செய்து நீதிமன்றத்துக்கு கொண்டு வந்தனர். இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் தேவராஜன் ஆஜரானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




