பவானிசாகர் அணை நீரை ஓடத்துறை குளத்தில் நிரப்பும் முயற்சிக்கு கீழ்பவானி பாசன விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
ஈரோட்டில் கூட்டமைப்பின் செயலர் வடிவேல் தலைமையில், தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் கே.சி.ரத்தினசாமி, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் மாநில துணைத் தலைவர் துளசிமணி, தற்சார்பு விவசாயிகள் சங்க அமைப்பாளர் பொன்னையன், கூட்டமைப்பு துணைத் தலைவர் ராமசாமி, பொருளாளர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் 44 பாசன சபை நிர்வாகிகள், அனைத்து விவசாய சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் இப்பிரச்னை குறித்து அனைவரும் பேசினர்.
இதுகுறித்து, கூட்டமைப்புச் செயலாளர் வடிவேல், தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் கே.சி.ரத்தினசாமி ஆகியோர் கூறியதாவது:
ஓடத்துறை குளத்துக்கு உள்பட்ட பகுதியில் வறட்சி நிலவி வருவதால் பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் விவசாயி ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பொதுப் பணித் துறையின் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து போதிய நீர் இருப்பு இருந்தால் தண்ணீர் திறப்பது குறித்து பரிசீலனை செய்யலாம் என்று உத்தரவிட்டுள்ளது.
ஓடத்துறை குளம் என்பது கீழ்பவானி வாய்க்காலில் இருந்து வெளியேறும் கசிவுநீரை சேமித்து வைக்கும் கசிவுநீர்க் குட்டை ஆகும். கீழ்பவானி பாசனப் பகுதியில் இதேபோல 34 கசிவுநீர்க் குட்டைகள் உள்ளன. கசிவுநீர்க் குட்டைக்காக இதுவரை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதே இல்லை. அவ்வாறு தண்ணீர் திறந்துவிட்டால் அது கீழ்பவானி பாசனத்தை நம்பியுள்ள 2.7 லட்சம் ஏக்கர் பாசன நிலங்களையும் பாதிக்கும்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பான உண்மை நிலையை விளக்கிக் கூறாத காரணத்தால் தண்ணீர் திறப்பு குறித்து அதிகாரிகள் பரிசீலனை செய்யலாம்
என்று தீர்ப்பு வந்திருப்பது மற்ற பாசன நிலங்களையும் பாதிக்கும் என்பதால் உயர் நீதிமன்றத்தில் கூட்டமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 6) ரிட் மனு தாக்கல் செய்ய இருக்கிறோம். பவானிசாகர் அணையில் போதுமான நீர் இருப்பு இல்லாத நிலையில் ஓடத்துறை குளத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் அதிகாரிகளைத் தொடர்ந்து வற்புறுத்துவது கீழ்பவானி பாசன விதிகளுக்கு முற்றிலும் புறம்பானது.
தற்போது அரசியல் ரீதியாகவும், அமைச்சர் என்ற முறையிலும் அதிகாரிகளை வற்புறுத்துவது விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத சுயநலன் சார்ந்ததாகவே நாங்கள் பார்க்கிறோம். எனவே, விவசாயிகள் நலனுக்கு எதிராக செயல்பட்டு வரும் அமைச்சர் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
இதில், பாசன சபை நிர்வாகிகள் எல்-9 பாசன சபைத் தலைவர் தங்கராஜ், இணைச் செயலாளர் பா.மா.வெங்கடாசலபதி, தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.