திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பருவ மழை குறைவு: காரீப், ராபி பருவ சாகுபடிக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை

பருவ மழை குறைவு காரணமாக காரீப், ராபி  பருவ சாகுபடிப் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என ஈரோடு மாவட்ட  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 1:34 am

DIN

பருவ மழை குறைவு காரணமாக காரீப், ராபி  பருவ சாகுபடிப் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என ஈரோடு மாவட்ட  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் அணையின் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, கீழ்பவானி, காலிங்கராயன் ஆகிய நான்கு பாசனங்களில் 2.5 லட்சம் ஏக்கர் பரப்பளவு பாசன வசதி கிடைத்து வந்தது. கடந்த சில ஆண்டுகளாகப் பருவ மழை குறைந்து வருவதால் விவசாய சாகுபடி பரப்பளவு சரிவைச் சந்தித்து வருகிறது.
 ஈரோடு மாவட்டத்தைப் பொருத்தவரையில் நெல் சாகுபடியில் குறுவை, சம்பா, நவரை ஆகிய மூன்று பருவங்களும், மற்ற பயிர்களுக்கு காரீப், ராபி ஆகிய இரண்டு பருவங்களிலும் பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பருவத்துக்கும் உரிய பயிர்களுக்கு பிரிமீயத்தை விவசாயிகள் பலர் செலுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டில் காரீப் பருவத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 95 கோடி வரை இழப்பீடு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு அளிக்கப்பட்டு வருகிறது.   இந்நிலையில் சென்ற ஆண்டில் தென்மேற்குப் பருவ மழை சராசரி மழை அளவான 212.9 மில்லி மீட்டருக்கு 310.31 மில்லி மீட்டரும், வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் சராசரி அளவான  316.3 மில்லி மீட்டருக்கு 194.11 மில்லி மீட்டரும் மழை கிடைத்தது.
 பருவம் தவறிய மழையின் காரணமாக பாசனங்களுக்கு அக்டோபர் 5-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறப்பு காரணமாக நெல் சாகுபடி இருந்தாலும், வழக்கத்தை விட மிகவும் குறைவான பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால், பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பிரிமீயம் செலுத்திய விவசாயிகளுக்கு இழப்பீடுத் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 இதுகுறித்து மாவட்ட விவசாயிகள் கூறியதாவது:
 ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக சரியான பருவ மழை பெய்யவில்லை. சென்ற ஆண்டில்  பருவம் தவறி மழை பெய்தது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் சிறிதளவு அதிகரித்துள்ளது. ஆனால், பாசனத்துக்கு கை கொடுக்கவில்லை. தற்போது பாசன வாய்க்கால்களில் திறக்கப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்தி  விவசாயிகள் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
 மானாவாரி நிலங்கள் நிறைந்த பகுதியில் சோளப்பயிர், நிலக்கடலை உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. ஆனால்,  போதிய நீரின்றி வளர்ச்சியின்றி கருகி வருகிறது. பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பருவத்துக்கான காப்பீட்டு பிரிமீயம் செலுத்தலாம் என வேளாண் துறை அறிவித்தது. அதனடிப்படையில் நிலக்கடலை, நெல், மக்காச்சோளம், மஞ்சள், எள் உள்ளிட்ட பயிர்களுக்கு பெரும்பாலான விவசாயிகள் காப்பீட்டு பிரிமீயம் செலுத்தியுள்ளனர்.  
 பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர் செய்து காய்ந்துபோனால் ஒரு வகையான இழப்பீடு, அறுவடை நேரத்தில் சேதமானால் ஒரு வகையான இழப்பீடு அல்லது பிர்கா அளவில் 25 சதவீதத்துக்கும் குறைவான சாகுபடி செய்தால் ஒரு வகையான இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பருவம் தவறிய மழையால் பிர்கா வாரியாக, குறிப்பிட்ட பயிர்கள்  25 சதவீதத்துக்கும் குறைவாகவே சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால், 2017-ஆம் ஆண்டில் காரீப், ராபி ஆகிய பருவத்தில் பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகள் விதைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு காப்பீட்டு நிறுவனம் மூலம் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.