பவானியில் சித்திரை மாத திருவிழாவுக்கு சிற்பத் தேரோடுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு

பவானி சங்கமேஸ்வரர் கோயிலுக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் செய்யப்பட்டு வரும் புதிய மரத்தேர் பணிகள் முடிவடைந்து
Updated on
1 min read

பவானி சங்கமேஸ்வரர் கோயிலுக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் செய்யப்பட்டு வரும் புதிய மரத்தேர் பணிகள் முடிவடைந்து, வரும் சித்திரை மாத திருவிழாவுக்கு தயாராகுமா எனும் கேள்வி பக்தர்களிடையே எழுந்துள்ளது. 
பாரம்பரியம்மிக்க சிவாலயமாகவும்,  சுற்றுலாத் தலமாகவும் பவானி சங்கமேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 12 நாள்கள் திருவிழா நடைபெறும். மேலும்,  வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர்,  ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் ஆதிகேசவப் பெருமாள் தேரோட்டம் இரு நாள்கள் வெகு விமரிசையாக நடைபெறும். 
1935-ஆம் ஆண்டு பழ.தேவராய செட்டியாரால் மரச்சட்டங்களால் செய்யப்பட்ட தேரில்,  குறுக்குச் சட்டங்கள்,  மரச்சக்கரங்கள் பழுதடைந்ததால் தேரோட்டம் நடைபெறுவது தடைபட்டது. சுமார் 11 அடி அகலமும், 12 உயரமும் கொண்ட பிரம்மாண்டமான இத்தேரில் மரச்சிற்பங்கள் எதுவும் இல்லாமல், சிம்மம் உருவம் காணப்படும்.  தேரோட்டம் நடைபெறமுடியாத அளவுக்கு தேர் பழுதடைந்ததால், தேர்வீதியில் உள்ள நிலையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, இத்தேருக்குப் பதிலாக புதிதாக மரங்களில் சிற்பங்களுடன் கூடிய புதிய தேர் செய்ய முடிவு செய்யப்பட்டு, ரூ. 25 லட்சம் மதிப்பில் பணிகள் தொடங்கப்பட்டன. சங்கமேஸ்வரர் கோயில் வடக்கு வாசலுக்கு வெளியே அமைக்கப்பட்ட கூரையில் சிற்பி பால்ராஜ் தலைமையில் குழுவினர் தேர்செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 
மரங்களில் சிற்பங்கள் செதுக்கி, தேரின் அடிப்பாகங்கள் நிலைநிறுத்தப்பட்டு, தேரின் மேற்பகுதியில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பங்குனி மாத இறுதிக்குள் மரத்தேருக்கான பணிகள் முடிவடைந்து, வெள்ளோட்டம் விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் சித்திரைத் திருவிழாவில் தேரோட்டம் நடைபெறும் வகையில் கோயில் நிர்வாகம் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com