தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என சிஐடியூ சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.சௌந்தரராஜன் தெரிவித்தார்.
இதுகுறித்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியதாவது:
மோட்டார் தொழிலாளர் சட்டம் மற்றும் திருத்தம் தொடர்பான சட்டத்தை நாடாளுமன்றத்தில் இக்கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதைக் கண்டித்து அகில இந்திய அளவில் அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி போராட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகையை போக்குவரத்துக் கழகம் வழங்க மறுத்து வருகிறது.
பெருந்துறையில் போக்குவரத்து கழகம் வசம் உள்ள மருத்துவக் கல்லூரியை தமிழக அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது தொழிலாளர்களுக்கு செய்யக்கூடிய நம்பிக்கை துரோகமாகும். தொழிலாளர்கள் பணத்தைச் சேர்த்து கட்டப்பட்ட இக்கல்லூரியை ஒப்படைத்தால் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான இட ஒதுக்கீடு வாய்ப்பு பாதிக்கப்படும். எனவே, இம்முடிவை அரசு கைவிட வேண்டும்.
மத்திய அரசின் நடவடிக்கைகளால் அனைத்துத் தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி நடவடிக்கைக்கு பின் 50,000 தொழிற்சாலைகள் மூடப்பட்டு, 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மத்திய அரசு விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய மறுத்து வருகிறது. ஆனால், லட்சக்கணக்கான கோடி ரூபாயை பெருமுதலாளிகளுக்கு தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்தியாவை பாதுகாப்போம் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆகஸ்ட் 14 ஆம் தேதி சுதந்திர தினத்தை ஒட்டி இரவு முழுவதும் விடிய விடிய சிஐடியூ சார்பில் போராட்டம் நடத்தப்படும். மோட்டார் வாகன சட்டத்தின்படி நடத்துநர் இல்லாமல் பேருந்துகளை இயக்க கூடாது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை எதிர்பார்க்கிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









