
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே திங்கள்கிழமை அதிகாலையில் லாரி, சுற்றுலா வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 3 பெண்கள் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.
பெருந்துறையை அடுத்த துடுப்பதி, சிலேட்டர்புரம், விஜயமங்கலம், கள்ளியம்புதூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 15 பேர் சுற்றுலா வேன் ஏற்பாடு செய்து, கேரள மாநிலம், குருதமலை கத்தோலிக்க தேவாலயத்துக்கு புறப்பட்டுச் சென்றனர்.
ஈரோடு, பவானி சாலை, திருவள்ளுர் நகரைச் சேர்ந்த அண்ணாமலை மகன் பொன்னுசாமி (30) வேனை ஓட்டி வந்தார். சுற்றுலா ஏற்பாடு செய்த பெருந்துறையை அடுத்த சிலேட்டர்புரத்தைச் சேர்ந்த சேகர் மகன் சிவகுமார் (30) உடன் சென்றுள்ளார். பின்னர், ஞாயிற்றுக்கிழமை இரவு குருதமலையிலிருந்து அனைவரும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். வரும் வழியில் கள்ளியம்புதூர் பகுதியைச் சேர்ந்த 8 பேர் வேனில் இருந்து இறங்கிக் கொண்டனர். மற்ற 7 பேர் மட்டும் வந்தனர்.
பெருந்துறையை அடுத்த துடுப்பதி - சீனாபுரம் பிரிவு அருகே திங்கள்கிழமை அதிகாலை வந்து கொண்டிருந்தபோது, எதிரே கோவையிலிருந்து துணி பாரம் ஏற்றிக்கொண்டு லாரி வந்து கொண்டிருந்தது. லாரியை தேனி மாவட்டம், கண்டமனூர், ராமசந்திரபுரத்தைச் சேர்ந்த உதயசூரியன் (55) என்பவர் ஓட்டி வந்தார். அந்த லாரியில் அவரது உறவினர்கள் பன்னீர் செல்வம், ஜெகநாதன் ஆகியோர் இருந்தனர்.
இந்நிலையில், இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் வேனின் முன் பகுதி லாரிக்குள் புகுந்தது. இதில் வேன் ஓட்டுநர் பொன்னுசாமி, சுற்றுலா ஏற்பாடு செய்த சிவகுமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
வேனில் வந்த துடுப்பதியைச் சேர்ந்த மாது மகன் ராம்குமார் (19), சிலேட்டர் நகரைச் சேர்ந்த சேகர் மனைவி சகுந்தலா (48), ஈரோடு, திருவள்ளுர் நகரைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் தியா (53), சேகர் மனைவி பிரிசில்லா (35), பொன்னுசாமி மனைவி ஆதிரா (27), இவரது மகள் ஜியா (5), பெருந்துறையைச் சேர்ந்த பிரபு மனைவி ரேவதி (22), லாரி ஓட்டுநர் உதயசூரியன் அருகே இருந்த அவரது 2 உறவினர்கள் உள்பட 10 பேர் பலத்த காயமடைந்தனர்.
இவர்கள் அனைவரும் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் உயர் சிகிச்சைக்காக கோவை, ஈரோடு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து, பெருந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் நாகேஸ்வரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் லாரிக்குள் புகுந்த வேனை மீட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





