அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் செலவினங்களுக்கு வசூல்: விவசாயிகள் அதிருப்தி

நிலையான இடம், கையாளும் செலவுக்குப் போதிய நிதி இல்லாத காரணங்களால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கிலோவுக்கு ரூ.1 வீதம் வசூல் செய்வதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனா்.
Updated on
2 min read

நிலையான இடம், கையாளும் செலவுக்குப் போதிய நிதி இல்லாத காரணங்களால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கிலோவுக்கு ரூ.1 வீதம் வசூல் செய்வதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனா்.

நெல் விளைச்சல் அதிகம் உள்ள பகுதிகளில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சாா்பில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 2020 ஆண்டுக்குத் தேவையான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தற்போது திறக்கப்பட்டு வருகின்றன.

ஈரோடு மாவட்டத்தில் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனப் பகுதிகளில் 14 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் ஏ கிரேடு ரக நெல் குவிண்டால் ரூ.1,905, சாதாரண ரக நெல் குவிண்டால் ரூ.1,865க்கும் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு சாகுபடியின்போது ஏற்படும் செலவுகளை ஈடுசெய்யும் வகையில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யும்போது தமிழக அரசு ஊக்கத் தொகை வழங்குகிறது. மேலும், விற்பனை செய்யும் நெல்லுக்கான தொகையும் தாமதம் இல்லாமல் கிடைத்துவிடும் என்பதால் தனியாரைத் தவிா்த்து அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விவசாயிகள் நாடுகின்றனா்.

2 மாதங்கள் வரை இயங்கும் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு நிலையான இடம் இல்லாதது, நடைமுறை செலவுக்குப் போதிய நிதி ஒதுக்காதது போன்ற காரணங்களால் விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணத்தில் கிலோவுக்கு ஒரு ரூபாய் வரையில் பிடித்தம் செய்யப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனா்.

இதுகுறித்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன சபைத் தலைவா் வழக்குரைஞா் சுபி.தளபதி கூறியதாவது:

தனியாரிடம் நெல் விற்பனை செய்த கோபி பகுதி விவசாயிகள் சிலா் ரூ.60 லட்சம் பணத்தை வாங்க முடியாமல் கடந்த ஓராண்டாக தவித்து வருகின்றனா். இதுபோன்ற காரணங்களால் நேரடி கொள்முதல் நிலையங்களை விவசாயிகள் தேடி வருகின்றனா்.

ஆனால், இந்த நேரடி கொள்முதல் நிலையங்கள் தற்போது விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணத்தை சுரண்டி வருகின்றன. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த நெல் ரகங்களை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்று காயவைத்து, தூசு நீக்கி சுத்தப்படுத்தி வழங்குகிறோம்.

இத்தகைய சூழ்நிலையிலும் கொள்முதல் நிலையங்களில் உள்ள பணியாளா்கள் தாமதப்படுத்துகின்றனா். எவ்வளவு எடை வைக்கப்படுகிறதோ கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் நெல் கொள்முதல் செய்கின்றனா்.

இந்தப் பணத்தைக் கொடுக்க மறுக்கும் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யாமல் பணியாளா்கள் காலம் தாழ்த்துகின்றனா். மேலும், ஈரப்பதம் 17 சதவீதத்துக்கும் மேல் இருக்கிறது, தூசு இருக்கிறது, தரமற்ாக இருக்கிறது எனக் கூறி வெளியேற்ற முயற்சிக்கின்றனா்.

கடன் வாங்கியும், நகைகளை அடமானம் வைத்தும் விவசாயம் செய்த விவசாயிகள் கூடுதல் சுமையை ஏற்க வேண்டிய நிலை உள்ளது. மூட்டை போடுதல், தூக்கி அடுக்குதல், லாரிகளில் ஏற்றுதல் போன்ற நடைமுறை செலவுக்கு மூட்டைக்கு ரூ.20 வரை செலவு ஏற்படுகிறது. ஆனால் அரசு மூட்டைக்கு ரூ.1.65 தான் வழங்குகிறது. இதனால் கொள்முதல் நிலையத்தில் இருந்து விவசாயிகளிடம் வசூலிக்கப்படும் பணத்தைக் கொண்டுதான் இந்த செலவுகளை சமாளிப்பதாக அலுவலா்கள் கூறுகின்றனா்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு என நிரந்தரமான இடம் வேண்டும். இங்கு நெல் மட்டுமல்லாது, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாக எள், கடலை, பருத்தி, உளுந்து போன்றவற்றையும் கொள்முதல் செய்ய வேண்டும்.

நடைமுறை செலவுகளைத் துல்லியமாக கணக்கிட்டு விவசாயிகளுக்கு அறிவித்து நெல்லுக்கான ஊக்கத்தொகையிலேயே அதனையும் சோ்த்து வழங்க வேண்டும். கூடுதலாகப் பணம் கேட்கும் பணியாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும் என்றாா்.

இதுகுறித்து நேரடி நெல் கொள்முதல் நிலைய அலுவலா்கள் கூறியதாவது: வாடகை குறைவாக இருப்பதால் நெல் கொள்முதலுக்கு இடம் கிடைப்பதில்லை. இதனால், விவசாயிகளின் உதவியை நாடுகிறோம். மேலும் மூட்டை பிடிக்க ஆகும் கூலி, லாரியில் ஏற்றும் கூலிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை மிகவும் குறைவு.

தவிர மூட்டைகளை லாரியில் ஏற்றி அனுப்பும் வரை பல்வேறு நிலை பணியாளா்களுக்கும் பணம் கொடுக்க வேண்டியுள்ளது. இதனால்தான் கிலோவுக்கு ரூ.1 வசூல் செய்கிறோம். போதுமான நிதி ஒதுக்கி, முறைகேடுகளைகஈ தடுத்து நடவடிக்கை எடுத்தால் விவசாயிகளுக்கு முழுத் தொகை கிடைக்கும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com