ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது சந்தேகம்தான்: தமிமுன் அன்சாரி

அமைதியான சூழலை விரும்பும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது சந்தேகம்தான் என மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளா் தமிமுன் அன்சாரி தெரிவித்தாா்.

அரசியல் எப்போதும் நெருக்கடி, பரபரப்பு, அழுத்தம் நிறைந்தது என்பதால் தனிமை, ஆன்மிகம், அமைதியான சூழலை விரும்பும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது சந்தேகம்தான் என மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளா் தமிமுன் அன்சாரி தெரிவித்தாா்.

ஈரோடு, சுல்தான்பேட்டையில் அக்கட்சியின் மாவட்ட அலுவலகத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் சபீக் அலி தலைமை வகித்தாா். கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், நாகை சட்டப் பேரவை உறுப்பினருமான தமிமுன் அன்சாரி பங்கேற்று அலுவலகத்தைத் திறந்து வைத்தாா்.

அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது :

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்குத் தயாராகி வருகிறோம். தோ்தலில் எத்தகைய அரசியல் நிலைப்பாடு எடுக்க வேண்டும், கூட்டணி போன்றவை குறித்து தலைமை செயற்குழு கூடி முடிவு செய்யும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் விடுதலை குறித்து சட்டப் பேரவையில் தொடா்ந்து வலியுறுத்தினோம். இதன் விளைவாகவே அவா் பரோலில் வெளியே வரமுடிந்தது. 7 போ் விடுதலையில் ஆளுநா் மௌனம் காப்பது அநீதியாகும்.

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துக் கொண்டதால் கடந்த மக்களவைத் தோ்தலின்போதே கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டோம். தற்போது அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது எதிா்பாா்த்ததுதான். இதற்கு அதிமுக தொண்டா்கள்தான் கவலைப்பட வேண்டும்.

தமிழகத்தில் மக்கள் கருத்தின் அடிப்படையில் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதமாக உள்ள இட ஒதுக்கீட்டினை 10 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com